நிபா வைரஸ் பரவியது எப்படி..? - சிறுவன் சாப்பிட்ட ரம்புட்டான் பழம் ஆய்வு

ஆடுகளை மேய்க்க சிறுவன் சென்ற வனப்பகுதியில் வவ்வால்கள் இருப்பதால் அதன் மூலம் வைரஸ் பரவி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Update: 2021-09-06 08:15 GMT
Image courtesy : iStock
திருவனந்தபுரம்

கேரளாவில் நிபா வைரஸால் உயிரிழந்த சிறுவன் ரம்புட்டான் பழங்களை சாப்பிட்டதால் அதனை ஆய்வு செய்ய அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளனர். 

கோழிக்கோட்டில் நிபா வைரஸால் சிறுவன் உயிரிழந்ததை அடுத்து சிறுவனின் தாய் மற்றும் இரு சுகாதாரப்பணியாளர்களுக்கு நோய் அறிகுறிகள் இருப்பது தெரிய வந்தது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். 

இதனிடையே, வவ்வால் மற்றும் பன்றி மூலம் மட்டுமே நிபா வைரஸ் பரவி வந்த நிலையில் சிறுவனின் வீட்டில் ஆடுகள் வளர்க்கப்படுவதால், அவற்றிற்கு பரிசோதனை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். 

ஆடுகளை மேய்க்க சிறுவன் சென்ற வனப்பகுதியில் வவ்வால்கள் இருப்பதால் அதன் மூலம் வைரஸ் பரவி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, சிறுவனின் வீட்டை ஆய்வு செய்த மத்தியக்குழு அங்கிருந்த ரம்புட்டான் மரத்தை பார்த்துள்ளனர். ரம்புட்டான் பழங்களை சிறுவன் சாப்பிட்ட தகவல் அறிந்ததும் அதனையும் அதிகாரிகள் ஆய்வு செய்ய எடுத்து சென்றனர். 

கேரளாவில் நிபா வைரசுக்கு சிறுவன் உயிரிழந்ததையடுத்து மத்திய மருத்துவ நிபுணர்க் குழு திருவனந்தபுரத்துக்கு விரைந்துள்ளது.

நிபா வைரஸ் பரவுவது குறித்து கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனிடையே கேரளாவில் கடந்த 24 மணிநேரத்தில்  26, ஆயிரத்து 701 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   வைரஸ் தாக்குதலுக்கு 74 பேர் உயிரிழந்துள்ளனர்.

வீடியோ

மேலும் செய்திகள்