இந்தியாவின் இழப்பீட்டை ஏற்க ‘கெய்ர்ன்’ நிறுவனம் சம்மதம்

இந்தியாவில் சொத்துகள் வைத்துள்ள வெளிநாட்டு நிறுவனங்களின் உரிமை கைமாறும்போது, அந்நிறுவனங்களிடம் முன்தேதியிட்டு மூலதன ஆதாய வரி வசூலிப்பதற்கான மசோதா, கடந்த 2012-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

Update: 2021-09-07 17:54 GMT
இதன் அடிப்படையில், இங்கிலாந்தை சேர்ந்த ‘கெய்ர்ன் எனர்ஜி’, வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்களிடம் ரூ.8 ஆயிரத்து 100 கோடி மூலதன வரியாக வசூலிக்கப்பட்டது. இதை எதிர்த்து சர்வதேச தீர்ப்பாயத்தில் கெய்ர்ன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அதில், அந்நிறுவனத்திடம் வசூலித்த ரூ.7 ஆயிரத்து 900 கோடியை திருப்பி வழங்குமாறு இந்திய அரசுக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டது. ஆனால் அதை இந்திய அரசு ஏற்கவில்லை. எனவே, பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உள்ள இந்திய அரசின் சொத்துகளை கையகப்படுத்த கெய்ர்ன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்தநிலையில், முன்தேதியிட்டு வரி வசூலிக்கும் முறையை ரத்து செய்வதற்கான மசோதா, கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, இந்திய அரசுக்கு எதிராக தொடர்ந்த வழக்குகளை வாபஸ் பெற்றால், அந்நிறுவனங்களிடம் வசூலித்த வரி திருப்பி வழங்கப்படும் என்று கூறப்பட்டது.

கெய்ர்ன் நிறுவனத்துக்கு ரூ.7 ஆயிரத்து 900 கோடியை திருப்பி வழங்குவதாக இந்திய அரசு கூறியது. இதை பரிசீலித்த கெய்ர்ன் நிறுவனம், இந்த சமரசத்தை ஏற்றுக்கொள்வதாக நேற்று அறிவித்தது.

இந்த தொகையை இந்திய அரசு கொடுத்த 2 நாட்களில், இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்த அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெறுவோம் என்று கெய்ர்ன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சைமன் தாம்சன் கூறினார்.

மேலும் செய்திகள்