மக்கள் குடிநீர் கேட்டு கோர்ட்டு கதவை தட்டுவது துரதிர்ஷ்டம்: மும்பை ஐகோர்ட்டு

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு பிறகும் மக்கள் குடிநீர் கேட்டு கோர்ட்டு கதவை தட்டுவது துரதிர்ஷ்டம் என்று மும்பை ஐகோர்ட்டு வேதனை தெரிவித்து உள்ளது.

Update: 2021-09-09 02:31 GMT
குடிநீர் கேட்டு மனு
தானே மாவட்டம் பிவண்டி காம்தே கிராமத்தை சேர்ந்த ஒருவர் குடிநீர் கேட்டு மும்பை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், பிவண்டி-நிஜாம்பூர் மாநகராட்சி மற்றும் தானே மாவட்ட பஞ்சாயத்து சார்பில் ஸ்டெம் தண்ணீர் வினியோகம் மற்றும் இன்பிரா நிறுவனம் சார்பில் சப்ளை செய்யப்படும் குடிநீர் தனக்கு கிடைக்கவில்லை என்று கூறியிருந்தார். மேலும் அவர், "மாதத்திற்கு 2 தடவை தான் தனக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. அதுவும் 2 மணி நேரம் தான் கிடைக்கிறது. எனவே தனக்கு தினசரி குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரி இருந்தார்.

துரதிர்ஷ்டம்
இந்த மனு நீதிபதிகள் எஸ்.ஜே. கதாவாலா, மிலிந்த் ஜாதவ் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும் குடிநீருக்காக மக்கள் கோர்ட்டின் கதவை தட்டுவது துரதிர்ஷ்டம் என்று குறிப்பிட்டனர். அப்போது ஸ்டெம் நிறுவன நிர்வாக இயக்குனர் சார்பில் அளிக்கப்பட்ட பதிலில், "எங்கள் நிறுவனம் தினசரி குடிநீர் வினியோகம் செய்து வருகிறது. மனுதாரர் வசிக்கும் இடத்திற்கு கிராம பஞ்சாயத்து சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அந்த கிராம பஞ்சாயத்தில் மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக தண்ணீர் வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. குடிநீர் வினியோகம் மேம்படுத்தப்பட வேண்டும்" என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது:-

அடிப்படை உரிமை
குடிநீர் என்பது மக்களின் அடிப்படை உரிமை. இந்த அடிப்படை உரிமையை பெற நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு பிறகும் பொதுமக்கள் கோர்ட்டின் கதவை தட்டுவது உண்மையிலேயே துரதிர்ஷ்டம். தினமும் சில மணி நேரங்களாவது குடிநீர் வழங்கப்பட வேண்டும்.பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க மராட்டிய அரசு தோல்வி அடைந்து விட்டதாக நாங்கள் ஒரேயடியாக கூறி விட மாட்டோம். மேலும் மாநில அரசு மிகவும் உதவியற்றது என்பதை நாங்கள் ஏற்க மறுக்கிறோம். ஆனால் குடிநீர் வினியோகம் மேம்படுத்தப்படும் வரை மனுதாரருக்கு எப்படி குடிநீர் வழங்குவீ்ர்கள் என்று தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

மேலும் ஸ்டெம் நிறுவன இயக்குனர் இன்று (வியாழக்கிழமை) நேரில் ஆஜராகி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்