ஒரு ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி இறப்பை 96.6 சதவீதம் தடுக்கும் - ஆய்வில் தகவல்

ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி இறப்பை 96.6 சதவீதம் தடுக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

Update: 2021-09-09 22:21 GMT
புதுடெல்லி, 

டெல்லியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தலைவர் பலராம் பார்கவா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “கொரோனா வைரஸ் தடுப்பூசியின் ஒரு டோஸ், இறப்பை தடுப்பதில் 96.6 சதவீதம் பயனுள்ளதாக இருக்கும். 2 டோஸ் தடுப்பூசி, 97.5 சதவீதம் இறப்பைத் தடுக்கும்” என தெரிவித்தார்.

மேலும், கொரோனாவால் ஏற்படுகிற இறப்பை, 18-44, 45-59, 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயது பிரிவினர் என எல்லா வயது பிரிவினருக்கும் தடுப்பூசிகள் பயன் அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“கடந்த ஏப்ரல் மாதம் 18-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி வரையிலான தரவுகளை பார்க்கிறபோது, தடுப்பூசிகள் மரணத்தை தடுக்கின்றன. 

கொரோனா 2-வது அலையில் ஏப்ரல், மே மாதங்களில் இறந்தவர்களில் பெரும்பாலோர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள்” எனவும் அவர் குறிப்பிட்டார். சுகாதார துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறும்போது, “தடுப்பூசி போடுவதும், போட்டுக்கொள்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த மே மாதம் தினசரி சராசரியாக 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது, அதுவே செப்டம்பரில் 78 லட்சமாக அதிகரித்துள்ளது. இது இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்” என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்