நடிகை கங்கனா ரணாவத்துக்கு எதிராக கைது ‘வாரண்ட்’ பிறப்பிக்கப்படும்: மும்பை கோர்ட்டு

பாடலாசிரியர் ஜாவித் அக்தர் தொடர்ந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றால் நடிகை கங்கனா ரணாவத்துக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என மும்பை கோர்ட்டு எச்சரித்து உள்ளது.

Update: 2021-09-14 20:00 GMT
ஐகோர்ட்டு தள்ளுபடி
பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தை அடுத்து, நடிகை கங்கனா ரணாவத் பாலிவுட் பிரபலங்கள் மீது பரபரப்பு புகார்களை கூறியிருந்தார். இதில், கடந்த ஆண்டு அவர் அளித்த பேட்டி ஒன்றில், பிரபல பாடலாசிரியர் ஜாவித் அக்தர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறினார். இதையடுத்து ஜாவித் அக்தர் கங்கனா ரணாவத் மீது மும்பை அந்தேரி கோர்ட்டில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கங்கனா ரணாவத் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். அவரது மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

கோர்ட்டு எச்சரிக்கை
இந்தநிலையில் மானநஷ்ட மனு மீதான விசாரணை கோர்ட்டில் நேற்று நடந்தது. அப்போது நடிகை தரப்பில் ஆஜரான வக்கீல், உடல்நிலை சரியில்லாததால் அவர் விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை என்றார்.இதற்கு வழக்கு விசாரணையை தாமதப்படுத்த கங்கனா ரணாவத் தரப்பு திட்டமிட்டு நாடகங்களை அரங்கேற்றி வருவதாக எதிர்தரப்பு வக்கீல் குற்றம்சாட்டினார். மேலும் கடந்த பிப்ரவரி மாதம் முதல் கங்கனா ரணாவத் விசாரணைக்கு ஆஜராகாமல் பல்வேறு காரணங்களை கூறிவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு ஆர்.ஆர்.கான், கங்கனா ரணாவத் நேற்று மட்டும் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்தார். மேலும் மனு மீதான விசாரணையை வருகிற 20-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் கங்கனா ரணாவத் கோர்ட்டில் ஆஜராகவில்லை என்றால், அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

மேலும் செய்திகள்