வக்கீலிடம் இருந்து ரூ.2 லட்சத்தை பறித்து மக்கள் மீது பண மழை பொழிந்த குரங்கு - உத்தரபிரதேசத்தில் வினோத சம்பவம்

உத்தரபிரதேசத்தில் வக்கீல் ஒருவரிடம் இருந்து ரூ.2 லட்சம் பணம் வைத்திருந்த பையை பறித்த ஒரு குரங்கு, மரத்தின் மீது ஏறி பணத்தை மக்கள் மீது மழையாகப் பொழிந்த வினோத சம்பவம் நடந்திருக்கிறது.

Update: 2021-09-19 00:01 GMT
லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் உள்ள ஷாகாபாத் நகரத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார் சர்மா. வக்கீலான இவர், தனது வாடிக்கையாளர் ஒருவரின் நிலப் பதிவுக்காக முத்திரைத்தாள்கள் வாங்குவதற்கு ஒரு பையில் ரூ.2 லட்சத்துடன் சென்று கொண்டிருந்தார். அப்போது எங்கிருந்தோ பாய்ந்து வந்த ஒரு குரங்கு, வக்கீலின் பணப் பையை பறித்துச் சென்று விட்டது. பதைபதைத்துப் போன வக்கீல் வினோத்குமார், குரங்கைத் துரத்திச் சென்றார்.

விறுவிறுவென்று ஓடிய குரங்கு, ஒரு வேப்பமரத்தின் உச்சியில் ஏறிக்கொண்டது.

என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த வக்கீல், தனது பையைக் கொடுத்துவிடுமாறு குரங்கிடம் கீழிருந்து கெஞ்சினார். இதற்கிடையில் பொதுமக்கள் சிலரும் அங்கு திரண்டு, கைதட்டியும், கூச்சலிட்டும் குரங்கிடம் இருந்து பணப் பையை பெற முயன்றனர்.

அதன் காரணமாகவோ என்னவோ, குரங்கு பையை கீழே வீசி எறிந்துவிட்டது. ஆனால் அதற்கு முன், இரண்டு ரூ.50 ஆயிரம் கட்டுகள் என ரூ.1 லட்சத்தை எடுத்துக் கொண்டது. அதை ‘பண மழையாக’ப் பொழிந்து மகிழ்ந்தது.

ரூ.1 லட்சம் பணத்துடன் கீழே எறியப்பட்ட பையை எடுத்துக் கொண்ட வக்கீல், மீதமுள்ள பணம் காற்றில் பறப்பதைக் கண்டு கலங்கி விட்டார். கூடியிருந்த மக்களிடம் அவற்றை சேகரித்துத் தருமாறு இறைஞ்சினார்.

அதன்படி பொதுமக்களும் குரங்கு வீசியெறிந்த ரூபாய்த் தாள்களை சேகரித்து வக்கீல் வினோத்குமாரிடம் கொடுத்தனர். ஆனால் அவர் திரட்டப்பட்ட பணத்தை கடைசியில் எண்ணிப் பார்த்தபோது ரூ.95 ஆயிரம்தான் இருந்தது. ஆக, ரூ.5 ஆயிரம் மாயமாகிவிட்டது. பணத்தைப் பொறுக்கியவர்களில் சிலர் அதை சுட்டுச் சென்று விட்டனர். ஆனால் வினோத்குமார் அதை குறைகூறவில்லை. தனக்கு உதவிய பொதுமக்களுக்கு நன்றி கூறி, நடையைக் கட்டினார் ரூ.1.95 லட்சம் அடங்கிய பையை இறுகப் பிடித்தபடி.

இதற்கிடையில் சிலர் இந்த அரைமணி நேர ‘நாடகத்தை’ செல்போனில் படம் பிடித்து, சமூக வலைதளங்களில் வலம்வர வைத்துவிட்டனர்.

உத்தரபிரதேசத்தின் புதான் மாவட்டத்திலும் கடந்த ஆண்டு அக்டோபரில் ஒரு பெண்ணிடம் இருந்து பணப் பையை பறித்துச் சென்ற இரு குரங்குகள், இதுபோல பணத்தைத் தூவி ‘விளையாடிய’ சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்