திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு டோக்கன்கள் வழங்கவில்லை; பக்தர்கள் திடீர் போராட்டம்

திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு டோக்கன்களை வழங்கவில்லை என பக்தர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-09-24 13:20 GMT



திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் நெரிசலை தவிர்க்க சுமார் 8 மாதங்களாக ஆன்லைன் மூலம் ரு.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள், வி.ஐ.பி. தரிசன டிக்கெட் பெற்றவர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்து வந்தனர்.

கொரோனா பரவல் குறைந்ததால் சில வாரங்களுக்கு முன் உள்ளூர் பக்தர்கள் மட்டும் தினமும் 2 ஆயிரம் பேர் இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து கடந்த 20ந்தேதி முதல் வெளிமாநில பக்தர்களுக்கும் இலவச டிக்கெட் வழங்கப்பட்டது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலை தரிசிப்பதற்கான இலவச தரிசன டோக்கன்கள் நாளை முதல் ஆன்லைனில் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில்  நாளை வரை  திருப்பதி பஸ் நிலையம் அருகே உள்ள தேவஸ்தான சீனிவாசா  கட்டிட  வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இலவச தரிசன டோக்கன் வழங்கும் கவுண்ட்டரில் நேற்றே டோக்கன்கள் வழங்கப்பட்டு விட்டன.

எனவே அந்த கவுண்ட்டரை தேவஸ்தானம் மூடி உள்ளது. இதனையறியாத பக்தர்கள்  ஓய்வறை எதிரே நள்ளிரவு முதல் காத்திருந்தனர். இன்றும் இலவச தரிசன டோக்கன் கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சீனிவாச வளாகத்திலுள்ள இலவச தரிசன டோக்கன் வாங்க குவிந்தனர்.

கவுண்ட்டர் மூடப்பட்டிருந்த நிலையில் இனிமேல் இங்கு இலவச தரிசனம் வழங்கப்படாது என்று அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் கூறியதால் இலவச தரிசன டோக்கன் வழங்க வேண்டும் எனக்கூறி கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இலவச தரிசன டிக்கெட்டுகள் அனைத்தும் வழங்கிவிட்டதால், டிக்கெட் தர இயலாது என தேவஸ்தான அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் இன்று காலை அறிவித்தனர்.

ஒரு கட்டத்தில் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சீனிவாச கட்டிடம் எதிரில் இருக்கும் சாலையில் அமர்ந்து போக்குவரத்தை தடுத்து நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென அவ்வழியாக சென்ற அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.  தகவல் அறிந்து அங்கு வந்த திருப்பதி காவல் துறையினர் பக்தர்களை பலவந்தமாக அப்புறப்படுத்தி கலைத்தனர்.

போக்குவரத்துக்கு இடையூறாக பக்தர்களை தூண்டி மறியலில் ஈடுபட வைத்ததாக 15 பக்தர்களை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் நாளை முதல் இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.



மேலும் செய்திகள்