சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: நிதிஷ்குமார்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நிதிஷ்குமார் மீண்டும் வலியுறுத்தினார். மேலும், ஜார்கண்ட் மாநில அனைத்து கட்சி குழு, அமித்ஷாவை சந்தித்து இதே கோரிக்கையை விடுத்தது.

Update: 2021-09-26 18:48 GMT
சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு
2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில், சாதி விவரங்களை சேகரிக்க வேண்டும் என்று பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட பல்வேறு மாநில கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஐக்கிய ஜனதாதள தலைவரும், பீகார் மாநில முதல்-மந்திரியுமான நிதிஷ்குமார், ஏற்கனவே பிரதமர் மோடியை நேரில் சந்தித்து இந்த கோரிக்கையை முன்வைத்தார்.இதற்கிடையே, கடந்த வியாழக்கிழமை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், “எஸ்.சி., எஸ்.டி.யை தவிர, இதர சாதிகளின் விவரங்களை சேகரிப்பது இல்லை என்று கொள்கை முடிவு எடுத்துள்ளோம்” என்று கூறப்பட்டு இருந்தது.இதனால், மீண்டும் இவ்விவகாரம் பலத்த விவாதத்தை உருவாக்கி இருக்கிறது.

தேசநலனுக்கு உகந்தது
இந்தநிலையில், நக்சலைட்டுகள் நடமாட்டம் மிகுந்த மாநிலங்களின் முதல்-மந்திரிகள் கூட்டத்தை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று கூட்டினார். அதில் பங்கேற்பதற்காக நிதிஷ்குமார் டெல்லி சென்றார்.

டெல்லியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தேசநலனுக்கு உகந்தது. நாட்டின் வளர்ச்சிக்கு இது உதவும். வளர்ச்சியில் பின்தங்கிய சமூகத்தினரை மேம்படுத்த பயன்படும். எனவே, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
இதற்காக ஊழியர்களுக்கு முறையான பயிற்சி கொடுத்து, கணக்கெடுப்பு நடத்தலாம். இந்த கோரிக்கை பீகார் மாநிலத்தில் இருந்து மட்டுமின்றி, பல மாநிலங்களில் இருந்தும் வந்துள்ளது. இப்பிரச்சினையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த பல்வேறு கட்சியினருடன் பேசி அடுத்தகட்ட நடவடிக்கையை முடிவு செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஹேமந்த் சோரன்
இதற்கிடையே, ஜார்கண்ட் மாநில அனைத்து கட்சி குழு, அம்மாநில முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் தலைமையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்தது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துமாறு வலியுறுத்தியது.மாநிலத்தின் உணர்வுகளை அமித்ஷாவிடம் எடுத்துக் கூறியதாக ஹேமந்த் சோரன் நிருபர்களிடம் தெரிவித்தார். இக்குழுவில், மாநில பா.ஜனதா தலைவர் தீபக் பிரகாசும் இடம் பெற்றிருந்தார்.

மேலும் செய்திகள்