திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 7-ந்தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

வருகிற 7-ந்தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

Update: 2021-09-26 18:59 GMT
திருமலை, 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (அக்டோபர்) 7-ந்தேதியில் இருந்து 15-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. கொரோனா தொற்று பரவலால் கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடக்கிறது. அதையொட்டி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் அக்டோபர் 5-ந்தேதி நடக்கிறது.

6-ந்தேதி மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை அங்குரார்ப்பணம், 7-ந்தேதி மீன லக்னத்தில் மாலை 5.10 மணியில் இருந்து மாலை 5.30 மணிவரை கொடியேற்றம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து இரவு 8.30 மணியில் இரவு 9.30 வரை பெரியசேஷ வாகனம், 8-ந்தேதி காலை 9 மணியில் இருந்து காலை 10 மணிவரை சிறிய சேஷ வாகனம், இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை ஹம்ச வாகனம், 9-ந்தேதி காலை 9 மணியில் இருந்து காலை 10 மணி வரை சிம்ம வாகனம், மதியம் 1 மணியில் இருந்து மாலை 3 மணி வரை ஸ்நாபன திருமஞ்சனம், இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை முத்து பந்தல் வாகனம், 10-ந்தேதி காலை 9 மணியில் இருந்து காலை 10 மணி வரை கல்ப விருட்ச வாகனம், மதியம் 1 மணியில் இருந்து மாலை 3 மணிவரை ஸ்நாபன திருமஞ்சனம், இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை சர்வ பூபால வாகனம்.

11-ந்தேதி காலை 9 மணியில் இருந்து காலை 10 மணி வரை பல்லக்கு வாகனம், இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணிவரை தங்கக் கருட வாகனம் (கருடசேவை), 12-ந்தேதி காலை 9 மணியில் இருந்து காலை 10 மணி வரை அனுமன் வாகனம், மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணிவரை தங்கத் தேரோட்டத்துக்கு பதிலாக சர்வ பூபால வாகனம், இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை தங்க யானை வாகனம், 13-ந்தேதி காலை 9 மணியில் இருந்து காலை 10 மணி வரை சூரிய பிரபை வாகனம், மதியம் 1 மணியில் இருந்து மாலை 3 மணி வரை ஸ்நாபன திருமஞ்சனம், இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை சந்திர பிரபை வாகனம்.

14-ந்தேதி காலை 7.35 மணியளவில் தேரோட்டத்துக்கு (மரத்தேர்) பதிலாக சர்வ பூபால வாகனம், இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை தங்கக் குதிரை வாகனம், 15-ந்தேதி காலை 6 மணியில் இருந்து காலை 8 மணி வரை பல்லக்கு உற்சவம், திருச்சி உற்சவம், ஸ்நாபன திருமஞ்சனம், காலை 8 மணியில் இருந்து 11 மணிவரை சக்கர ஸ்நானம் (சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி) ஐநா மஹாலில் நடக்கிறது. மேற்கண்ட வாகனங்களில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். கோவிலின் நான்கு மாடவீதிகளில் வாகனச் சேவை நடக்காது என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்