உ.பி. கலவரம்: உயிரிழப்பு 9 ஆக உயர்வு; இழப்பீடு அறிவிப்பு

உத்தர பிரதேசத்தில் ஏற்பட்ட கலவரத்திற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்து உள்ளது.

Update: 2021-10-04 23:50 GMT
லக்னோ,

உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரி மாவட்டம், பன்வீர்பூரில் ரூ.117 கோடி மதிப்பிலான 165 திட்டங்களை மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா நேற்று முன்தினம் தொடங்கிவைத்தார்.

இந்த விழாவில் பங்கேற்க பா.ஜ.க.வினர் பலர் வாகனங்களில் சென்றனர். அப்பகுதியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.  அதனை கடந்து அவர்கள் சென்றனர். அப்போது ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து போராட்டக்காரர்கள் மீது மோதியது. இதில் விவசாயிகள் சிலர் உயிரிழந்தனர்.

ஆத்திரமடைந்த விவசாயிகள் பா.ஜ.க.வினரின் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். 2 கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இருதரப்பினருக்கும் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது.

இந்த கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.  இந்நிலையில், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.45 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சமும் இழப்பீடு வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.  கலவரம் தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மத்திய உள் துறை இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உள்பட 30 பேர் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்