இந்தியாவில் 7 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடுவதில் தயக்கம்: ஆய்வில் தகவல்

இந்தியாவில் 7 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி போடுவதில் தயக்கம் காட்டுவதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

Update: 2021-10-06 23:33 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி, 

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தபோது, அதை போடுவதற்கு 60 சதவீதம் பேர் தயக்கம் காட்டி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் தடுப்பூசி மீதான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் பெரும் சேதத்தை உருவாக்கிய 2-வது அலை போன்ற காரணங்களால் தடுப்பூசி மீதான ஆர்வம் மக்களிடையே அதிகரித்தது. 

இந்தநிலையில் தற்போது இந்தியாவில் தடுப்பூசி போடுவதற்கான ஆர்வம் எவ்வாறு இருக்கிறது? என்பதை கண்டறிய ‘லோக்கல்சர்க்கிள்ஸ்’ என்ற நிறுவனம் ஆய்வு நடத்தியது. நாடு முழுவதும் 301 மாவட்டங்களில் 12,810 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் 18 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் வெறும் 7 சதவீதத்தினர் மட்டுமே தடுப்பூசி போடுவதில் தயக்கம் காட்டுகின்றனர். பாதுகாப்பு கவலை, தடுப்பூசிகளுக்கான அவசர பரிசோதனை, அவசர ஒப்புதல், பக்கவிளைவுகள் போன்ற காரணங்களை அவர்கள் கூறியுள்ளனர். அதேநேரம் தற்போதைய மற்றும் எதிர்கால உருமாறிய தொற்றுகளை தடுப்பதற்கு தற்போதைய தடுப்பூசிகள் செயல்திறன் உள்ளதாக இல்லை என முடிவு செய்து 27 சதவீதத்தினர் தடுப்பூசி போடுவதற்கு இதுவரை திட்டமிடவில்லை எனவும் கூறியுள்ளனர். 

எனினும் இவர்கள் தற்போதைய தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்த கூடுதல் தகவல்கள் மற்றும் வீரியமிக்க வேறு தடுப்பூசிகள் கிடைத்தால் தடுப்பூசி போடுவது குறித்து பரிசீலிக்கலாம் எனவும் இந்த நிறுவன தலைவர் சச்சின் தபரியா கூறினார். இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோர் மக்கள்தொகை 94 கோடியாக இருக்கும் நிலையில், இதில் 68 சதவீதத்தினர் ஒரு டோஸ் தடுப்பூசியாவது போட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்