கொரோனா தடுப்பூசி: உலகம் முழுமைக்கும் வழி காட்டிய இந்தியா; பிரதமர் மோடி

பெரிய அளவில் எப்படி தடுப்பூசி செலுத்துவது என உலக நாடுகளுக்கு இந்தியா வழி காட்டியுள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Update: 2021-10-07 08:34 GMT
ரிஷிகேஷ்,

உத்தரகாண்டின் ரிஷிகேஷ் நகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து பிரதமர் மோடி பி.எம். கேர்ஸ் திட்டத்தின் கீழ் 35 புதிய ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து உள்ளார்.  இதன்படி, நாட்டில் உள்ள 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

இதன்பின் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் கிடைக்க கூடிய வசதிகள், அதன் திறனை காட்டுகின்றன.  ஒரு பரிசோதனை கூடம் என்ற எண்ணிக்கையில் இருந்து, 3 ஆயிரம் பரிசோதனை கூடங்கள் என்ற அளவில் நாம் உயர்ந்து இருக்கிறோம்.

முக கவசங்கள் மற்றும் உபகரணங்களை இறக்குமதி செய்வதில் இருந்து, உற்பத்தி செய்யும் நிலைக்கு உயர்ந்து உள்ளோம்.  இதனால், இறக்குமதியாளர் நிலையில் இருந்து ஏற்றுமதியாளர் என்ற அந்தஸ்துக்கு இந்தியா விரைவாக முன்னோக்கி உயர்ந்து வருகிறது என பெருமிதமுடன் கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் பேசும்பொழுது, கோவின் வலைதள நடைமுறை வழியே நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி பணிகள் நடந்து வருகின்றன.  உலக நாடுகள் முழுமைக்கும் பெரிய அளவில் எப்படி தடுப்பூசி செலுத்துவது என இந்தியா வழி காட்டியுள்ளது என்று கூறியுள்ளார்.

இந்தியாவில், பி.எம். கேர்ஸ் திட்டத்தின் கீழ் 4 ஆயிரம் புதிய ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் வர இருக்கின்றன.  மாநில மற்றும் மத்திய அரசின் முயற்சிகளுடன் இவை செயல்படுத்தப்பட உள்ளன.  நம்முடைய நாடு மற்றும் மருத்துவமனைகள் அதிக திறன் வாய்ந்தவையாக மாறி வருகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்