வருகிற 15-ந் தேதி முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி: மத்திய அரசு

தனி விமானத்தில் வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை 15-ந் தேதி முதல் இந்தியா வர அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Update: 2021-10-07 18:34 GMT
சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை
இந்தியாவில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவத் தொடங்கியது. உடனே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உள்நாட்டு, சர்வதேச விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.கடந்த ஆண்டு மே மாதத்துக்கு பிறகு உள்நாட்டு விமான போக்குவரத்து படிப்படியாக அதிகரித்த போதிலும், சர்வதேச விமான போக்குவரத்துக்கு இன்னும் தடை நீடிக்கிறது.சில குறிப்பிட்ட நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, அந்த நாடுகளுக்கு மட்டும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

விசா நிறுத்தம்
சர்வதேச விமான சேவை நிறுத்தப்பட்டவுடன், வெளிநாட்டினர் இந்தியா வருவதற்கான அனைத்து வகையான விசாக்கள் வழங்கும் பணியும் நிறுத்தப்பட்டது. கொரோனா பரவல் குறையத்தொடங்கியவுடன், சுற்றுலா விசாவைத் தவிர, இதர வகை விசாக்கள் மட்டும் வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டன.அதே சமயத்தில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வராததால், சுற்றுலா துறை கடுமையாக பாதிக்கப்பட்டது. சுற்றுலாவை சார்ந்த ஓட்டல்கள், சொகுசு விடுதிகள், சுற்றுலா வாகனங்கள் ஆகியவற்றின் வருவாய் பாதிக்கப்பட்டது. சுற்றுலா வழிகாட்டிகள் போன்ற பலர் வேலை இழந்தனர்.

மத்திய அரசு அறிவிப்பு
அவர்களின் நிலையை கருதி, சுற்றுலா தலங்கள் நிறைந்த மாநில அரசுகள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியா வருவதற்கு அனுமதிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தின. இதுதொடர்பாக பல்வேறு மத்திய அமைச்சகங்களுடனும், மாநில அரசுகளுடனும் மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தியது.அதன் அடிப்படையில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியா வருவதற்கு அனுமதிப்பது என்று மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை கருத்திற்கொண்டும் இம்முடிவை எடுத்தது. இந்த முடிவை நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.

தனி விமானத்தில்...
அதன்படி, முதல்கட்டமாக, தனி விமானத்தில் வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மட்டும் இந்தியா வர அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்கள் வருகிற 15-ந் தேதியில் (வெள்ளிக்கிழமை) இருந்து இந்தியாவுக்கு வரலாம். அவர்களுக்கு புதிதாக சுற்றுலா விசா வழங்கப்படும்.அத்துடன், தனி விமானம் அல்லாமல், வழக்கமான விமானத்தில் வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நவம்பர் 15-ந் தேதியில் இருந்து அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கும் புதிதாக சுற்றுலா விசா வழங்கப்படும்.

மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல்கள் கூறப்பட்டுள்ளன. அந்த அறிக்கையில் மத்திய உள்துறை அமைச்சகம் மேலும் கூறியிருப்பதாவது:-

கொரோனா விதிமுறைகள்
இந்த முடிவால், கடந்த ஒன்றரை ஆண்டாக விசா வழங்குதல் மற்றும் சர்வதேச பயணத்துக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டுள்ளன.
இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், அவர்களை அழைத்து வரும் விமான நிறுவனங்களின் பிரதிநிதிகளும், மத்திய சுகாதார அமைச்சகம் பிறப்பித்த கொரோனா தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும் செய்திகள்