காஷ்மீர் என்கவுண்ட்டர்; 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை

காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் நடந்த என்கவுண்ட்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

Update: 2021-10-12 07:28 GMT
ஜம்மு,

காஷ்மீரில் சமீப காலங்களாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.  பொதுமக்களை இலக்காக கொண்டு அடிக்கடி கொடூர தாக்குதல்கள் நடந்து வருகின்றன.

சமீபத்தில் ஸ்ரீநகரில் பள்ளியொன்றில் புகுந்த பயங்கரவாதிகள் பாடம் நடத்தி கொண்டிருந்த ஆசிரியர் மற்றும் பள்ளி பெண் முதல்வர் என 2 பேரை வெளியே இழுத்து போட்டு, துப்பாக்கி சூடு நடத்தினர்.  இதில் அவர்கள் இருவரும் சம்பவ பகுதியிலேயே உயிரிழந்தனர்.

இதேபோன்று, கடந்த செவ்வாய் கிழமை 3 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.  இந்த சம்பவம் நடந்து 48 மணிநேரத்திற்குள் பள்ளி மீது தாக்குதல் நடந்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் பயங்கரவாத தாக்குதல்களில் 7 பேர் வரை படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.  இதனை தொடர்ந்து பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.

என்.ஐ.ஏ. அதிகாரிகளும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.  இந்த நிலையில், காஷ்மீர் போலீசார், பாதுகாப்பு படையினருடன் இணைந்து சோபியான் மாவட்டத்தில் பீரிபோரா பகுதியில் பயங்கரவாத தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.  நேற்றிரவு நடந்த இந்த வேட்டை இன்று காலையிலும் தொடர்ந்து உள்ளது.

இதன் தொடர்ச்சியாக அடையாளம் தெரியாத பயங்கரவாதியை படையினர் சுட்டு கொன்றுள்ளனர்.  இதுவரை மொத்தம் 2 பேர் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர் என காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்து உள்ளனர்.  தொடர்ந்து தேடுதல் வேட்டை நீடித்து வருகிறது.



மேலும் செய்திகள்