‘இ-ஷ்ராம்’ இணையதளம்: பெண்களே அதிகம் பதிவு செய்துள்ளதாக மத்திய அரசு தகவல்

‘இ-ஷ்ராம்’ இணையதளத்தில் பதிவு செய்துள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களில் பெண்களே அதிகம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Update: 2021-10-17 23:30 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி, 

நாடு முழுவதும் கோடிக்கணக்கான அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுக்கான ஆன்-லைன் பதிவு முறை ஒன்றை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ‘இ-ஷ்ராம்’ எனப்படும் இணையதளத்தில் பதிவு செய்யும் இவர்களுக்கு நிரந்தர கணக்கு எண் ஒன்று வழங்கப்படுகிறது. இந்த பதிவு மூலம் அரசின் பல்வேறு நலத்திட்டங்களை எளிதாக பெற முடியும். அத்துடன் இந்த கணக்கு வைத்திருக்கும தொழிலாளி ஒருவர் விபத்தில் உயிரிழந்தால் ரூ.2 லட்சமும், காயமடைந்தால் ரூ.1 லட்சமும் நிவாரணமாக கிடைக்கும்.

இவ்வாறு பல்வேறு நலன்களை வழங்கும் இந்த இணையப்பதிவை இதுவரை 4.09 கோடி தொழிலாளர்கள் முடித்துள்ளனர். இதில் 50.02 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். இதன் மூலம் ஆண்களை விட அதிக எண்ணிக்கையில் பெண் தொழிலாளர்கள் பதிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது. விவசாயம் மற்றும் கட்டிடத்துறையில் பணியாற்றும் தொழிலாளர்களே அதிக அளவில் பதிவு செய்துள்ளனர். அதேநேரம் ஆடை, ஆட்டோமொபைல்,, மூலதன பொருட்கள், கல்வி, சுகாதாரம், சில்லரை விற்பனை, சுற்றுலா உள்ளிட்ட துறைகளை சேர்ந்த கணிசமான தொழிலாளர்களும் பதிவு செய்திருப்பதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

ஒடிசா, மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகமாக பதிவு செய்திருப்பதாகவும் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்