போலீஸ் காவலில் விசாரணை கைதி பலி: குடும்பத்தினரை நேரில் சந்தித்தார் பிரியங்கா காந்தி

உ.பி.யில் போலீஸ் காவலில் விசாரணை கைதி பலியான சம்பவத்தில், அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து பிரியங்கா காந்தி ஆறுதல் கூறினார்.

Update: 2021-10-20 19:57 GMT
ஆக்ரா, 

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஜெகதிஷ்புரா போலீஸ் நிலையத்தில் ரூ.25 லட்சத்தை திருடியதாக குற்றச்சாட்டுக்கு ஆளானவர், அருண். விசாரணை கைதியான அவர் நேற்று முன்தினம் இரவில் போலீஸ் காவலில் மரணம் அடைந்தார்.

திருடப்பட்ட பணத்தை கைப்பற்ற அவரது வீட்டுக்கு போலீஸ் சென்றபோது, அவர் திடீரென உடல்நிலை பாதித்து, ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டபோது, அவரது உயிர் பிரிந்து விட்டதாக ஆக்ரா போலீஸ் சூப்பிரண்டு முனிராஜ் கூறுகிறார்.அருண், போலீஸ் காவலில் மரணம் அடைந்தது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி, டுவிட்டரில் பதிவிட்டார்.

மேலும் அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காக, பிரியங்கா லக்னோவில் இருந்து ஆக்ராவுக்கு நேற்று காரில் புறப்பட்டு சென்றபோது, முதல் சுங்கச்சாவடியிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே காங்கிரஸ் தொண்டர்கள் அங்கு பெருந்திரளாக குவிந்தனர். மாநில அரசுக்கு எதிராக அவர்கள் கோஷம் போட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சிறிது நேரத்துக்கு பின்னர் பிரியங்காவை போலீசார் விடுவித்தனர். 4 பேருடன் அவர் ஆக்ரா செல்லவும் அனுமதித்தனர். அவர் உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லல்லு உள்பட 4 பேருடன் ஆக்ராவுக்கு தனது பயணத்தை தொடர்ந்தார். இத்தனை பரபரப்புக்கு மத்தியில் தடுத்து நிறுத்தப்பட்டபோது பிரியங்காவுடன் பெண் போலீஸ் அதிகாரிகள் பலரும் போட்டி போட்டுக்கொண்டு ‘செல்பி ’ படம் எடுத்துக்கொண்டனர்.

இந்நிலையில்  போலீஸ் காவலில் விசாரணை கைதி பலியான சம்பவத்தில், அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து பிரியங்கா ஆறுதல் கூறினார்.  இதனையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “அருண் வால்மீகியின் குடும்பத்தை சந்தித்தேன். இந்த நூற்றாண்டில் இதுபோன்ற விஷயங்கள் யாருக்கு நடக்கும் என்று என்னால் நம்ப முடியவில்லை. வால்மீகி சமூகத்தைச் சேர்ந்த 17 முதல்18 பேர் வரை வெவ்வேறு இடங்களிலிருந்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக  அவர்கள் என்னிடம் கூறினார்கள். 

அவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர். என்னிடம் சொன்ன விஷயங்களைக்கூட என்னால் சொல்ல முடியாது. மனைவியின் முன்னால் அருண் அடிபட்டார். அவரது சகோதரர்கள் இரவு 2 மணியளவில் அவரைச் சந்தித்தனர். அந்த நேரத்தில் அவர் நன்றாக இருந்தார். அதிகாலை 2.30 மணியளவில், அவர் இறந்துவிட்டதாகக் கூறப்பட்டது. பிரதமர் அறிக்கை குடும்பத்திற்கு கொடுக்கப்படவில்லை. அங்கு வீடு சூறையாடப்பட்டது. யாருக்கும் நீதி கிடைக்கவில்லை. ஏழை குடும்பத்தில் அநீதி நடக்கிறது. நாம் அனைவரும் அமைதியாக இருக்க வேண்டுமா? என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் செய்திகள்