நிலக்கரி பற்றாக்குறையால் கர்நாடகம் இருளில் மூழ்கும் அபாயம்: டி.கே.சிவக்குமார்

நிலக்கரி பற்றாக்குறையால் கர்நாடகம் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக டி.கே.சிவக்குமார் கூறினார்.

Update: 2021-10-22 19:56 GMT
பசவராஜ் பொம்மை

கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள ஹனகல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அங்கு நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

சித்தராமையா ஆட்சியில் ஹனகல் தொகுதியின் வளர்ச்சிக்கு என்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கேள்வி கேட்டுள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் இந்த தொகுதிக்கு என்ன செய்யப்பட்டது என்பது குறித்து அரசு ஆவணங்களில் உள்ளன. அதை பசவராஜ் பொம்மை எடுத்து பார்த்து தெரிந்துக்கொள்ள வேண்டும்.

இலவச அரிசி

காங்கிரசின் 5 ஆண்டுகால ஆட்சியில் செய்த திட்டங்கள் மற்றும் பா.ஜனதா ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் அமல்படுத்தப்பட்ட திட்டங்கள் என்ன என்பது குறித்து விவாதிக்க நான் தயாராக உள்ளேன். இதற்கு பசவராஜ் பொம்மை தயாரா?. விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக அதிகரிப்பதாக பிரதமர் மோடி உள்பட பா.ஜனதா தலைவர்கள் கூறுகிறார்கள். அவ்வாறு விவசாயிகளின் வருமானம் 2 மடங்காக அதிகரித்து உள்ளதா?.

சித்தராமையா ஆட்சியில் ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அதனால் ஏழை மக்கள் வயிறாற உணவு உண்ணுகிறார்கள். அவர்கள் காங்கிரசுக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல்-டீசல் விலையை குறைப்பதாக பா.ஜனதாவினர் கூறினார்கள். ஆனால் மாறாக பெட்ரோல் விலை லிட்டர் ரூ.110-ஐ தாண்டிவிட்டது. டீசல் விலை ரூ.100-ஐ தொட்டுவிட்டது. சமையல் கியாஸ் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

சாதி-மதங்கள்

மத்தியில் பா.ஜனதா ஆட்சி அமைந்தால் பொதுமக்களின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் போடப்படும் என்று பிரதமர் மோடி கூறினார். அவ்வாறு வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் போடப்பட்டதா?. நாங்கள் அனைத்து சாதி-மதங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளோம். அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து செல்கிறோம். நிலக்கரி பற்றாக்குறையால் கர்நாடகம் இருளில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசிடம் இருந்து கர்நாடகத்திற்கு வர வேண்டிய நிதி வரவில்லை.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் பேசினார்.

மேலும் செய்திகள்