கோவா மாநிலத்தை சேர்ந்த ‘தற்சார்பு இந்தியா’ திட்ட பயனாளிகளுடன் மோடி கலந்துரையாடல்

கோவா மாநிலத்தை சேர்ந்த தற்சார்பு இந்தியா திட்ட பயனாளிகளுடன் மோடி கலந்துரையாடல் நடத்தினார்.

Update: 2021-10-23 17:31 GMT
கலந்துரையாடல்

பா.ஜனதா ஆட்சி செய்யும் கோவா மாநிலத்தில் அடுத்த ஆண்டு (2022) பிப்ரவரி மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அங்கு மத்திய அரசின் தற்சார்பு இந்தியா திட்டத்தின் நீட்சியான ‘தன்னிறைவு கோவா’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்ட பயனாளிகள் மற்றும் பங்குதாரர்களுடன் பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடல் நடத்தினார். காணொலி காட்சி மூலம் நடந்த இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜனதா அரசு என்ற இரட்டை என்ஜின் ஆட்சி முறை தொடர வேண்டும் என வலியுறுத்தினார்.

இது தொடர்பாக பேசும்போது அவர் கூறியதாவது:-

ஒவ்வொருவரின் பங்களிப்பு

வளர்ச்சிக்கான வழிகள் மற்றும் சாத்தியக்கூறுகளை 100 சதவீதம் பயன்படுத்தினால் மட்டுமே கோவா ‘தன்னிறைவு’ பெற முடியும். தன்னிறைவு கோவா என்பது நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியத்துக்கான உத்தரவாதமாகும். இது இளைஞர்கள் மற்றும் வேலையில்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலை வாய்ப்புகளை வழங்கும்.

இது வெறும் ஒரு 5 மாதமோ அல்லது 5 ஆண்டுகளுக்கோ ஆன வெறும் ஒரு திட்டம் அல்ல. மாறாக அடுத்த 25 ஆண்டுகளுக்கான பார்வையின் ஒரு முதற்கட்டமாகும். இந்த குறிக்கோளை அடைய கோவாவின் ஒவ்வொருவரும் பங்களிக்க வேண்டும்.

இரட்டை என்ஜின் அரசு

அதனால்தான், கோவாவுக்கு இரட்டை எஞ்சின் அரசின் தொடர்ச்சி தேவைப்படுகிறது. கோவாவிற்கு தற்போது போல ஒரு நிலையான அரசு மற்றும் தெளிவான கொள்கைகள் தேவை. இந்த கடலோர மாநிலத்தில் தற்போது இருப்பது போன்ற ஒரு பலம் வாய்ந்த தலைமை தேவை. ஒட்டுமொத்த கோவாவின் ஆசீர்வாதத்தின் மூலம் இந்த மாநிலத்தை தன்னிறைவு பெற்றதாக நம்மால் மாற்ற முடியும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கோவா மாநில முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் மற்றும் மந்திரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்