‘பச்சரிசி தருகிறோம், புழுங்கல் அரிசி தாருங்கள்’ - மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை

பச்சரிசிக்கு பதிலாக புழுங்கல் அரிசியை தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்ய மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2021-10-30 22:54 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி, 

தமிழகத்தை பொறுத்தவரை புழுங்கல் அரிசியின் தேவை என்பது 80 சதவீதமாகவும், பச்சரிசியின் பயன்பாடு 20 சதவீதமாகவும் இருக்கிறது. இந்த 20 சதவீதத்தில் பெரும்பான்மையான பச்சரிசி பயன்பாடு தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ளது.

தற்போது தமிழக அரசின் கிட்டங்கிகளில் பச்சரிசியின் இருப்பு அதிகமாக உள்ளது. இதை இந்திய உணவுக்கழக கிட்டங்கிக்கு அனுப்பவும், அதற்கு பதிலாக புழுங்கல் அரிசியை தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்து, அதை தேவையான பகுதிகளுக்கு பொதுவினியோக திட்டத்தின் கீழ் வழங்கவும் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, மத்திய பொதுவினியோகத்துறை மந்திரி பியூஷ் கோயலுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் டெல்லியில் மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை இணைச்செயலாளர் சுபோத்குமார் சிங்கை சந்தித்து மேற்கண்ட கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார். அவரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

மேலும் செய்திகள்