ஜெயில்களையும் மத்திய அரசு தனியார் மயமாக்கிவிட்டதா? - சஞ்சய் ராவத் கேள்வி

மத்திய அரசு ஜெயில், மத்திய முகமைகளையும் தனியார் மயமாக்கிவிட்டதா? என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பி உள்ளார்.

Update: 2021-11-07 22:22 GMT
கோப்புப்படம்
மும்பை, 

மராட்டியத்தில் ஆளுங்கட்சி தலைவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து அமலாக்கத்துறை, சி.பி.ஐ. உள்ளிட்ட மத்திய முகமைகள் விசாரணை நடத்தி வருகின்றன.

கடந்த 3-ந்தேதி சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் தேசியவாத காங்கிரசை சேர்ந்த முன்னாள் உள்துறை மந்திரி அனில்தேஷ்முக் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதேபோல வருமான வரித்துறை துணை முதல்-மந்திரி அஜித்பவாரின் குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். இதேபோல அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக சிவசேனாவை சேர்ந்த மந்திரி அனில் பரப்பிடமும் விசாரணை நடத்தினர். மேலும் பாவனா காவ்லி எம்.பி.க்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மத்திய அரசு ஜெயில்கள், மத்திய விசாரணை முகமைகளை தனியார் மயமாக்கிவிட்டதா என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “பா.ஜனதாவில் சேர்ந்த தலைவர்களுக்கும் அந்த கட்சியின் சித்தாந்தத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. பிரதமர் மோடி அனைத்து பொதுத்துறை மற்றும் அரசு சொத்துகளை தனியார் மயமாக்கி வருகிறார். ஜெயில்களும், மத்திய விசாரணை முகமைகளும் தனியாா் மயமாக்கப்பட்டுவிட்டதா? அல்லது சிறைச்சாலை உங்களின் சொத்தா?” என கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் செய்திகள்