முன்னாள் மந்திரி அனில்தேஷ்முக் அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு

அனில்தேஷ்முக்கின் அமலாக்கத்துறை காவல் வருகிற 15-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-13 00:20 GMT
மும்பை, 

மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங் முன்னாள் உள்துறை மந்திரி அனில்தேஷ்முக் மீது ரூ.100 கோடி மாமூல் புகாரை கூறினார். இந்த புகார் குறித்து விசாரணை நடத்திய அமலாக்கத்துறை சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கடந்த 2-ந் தேதி கைது செய்தது. இந்தநிலையில் 6-ந் தேதி அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்த மும்பை ஐகோர்ட்டு நேற்று வரை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க அனுமதி வழங்கியது.

இந்தநிலையில் விசாரணை காலம் முடிந்து அனில்தேஷ்முக் சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அனில்தேஷ்முக்கின் காவலை நீட்டிக்க வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது. அனில்தேஷ்முக் தரப்பு வக்கீல் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக அமலாக்கத்துறையால் கூறப்படும் முன்னாள் போலீஸ் அதிகாரி சச்சின் வாசேயை ஏன் கைது செய்யவில்லை. பரம்பீர் சிங்கிற்கு சம்மன் கூட அனுப்பாதது ஏன்? என்று கேட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சாத்பாய் அனில்தேஷ்முக்கின் அமலாக்கத்துறை காவலை வருகிற 15-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

இதற்கிடையே சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்ஜாமீன் கேட்டு அனில்தேஷ்முக் மகன் ரிஷிகேஷ் தாக்கல் செய்ய மனு மீதான விசாரணையை செசன்ஸ் கோர்ட்டு வருகிற 20-ந் தேதிக்கு ஒத்திவைத்து உள்ளது.

மேலும் செய்திகள்