மத்திய அரசின் அவரச சட்டங்களை எதிர்த்து மாநிலங்களவையில் தீர்மானம் கொண்டு வர எதிர்கட்சிகள் திட்டம்

மத்திய அரசின் அவரச சட்டங்கள் தொடா்பாக நாடாளுமன்றக் குளிா்கால கூட்டத்தொடரில் மத்திய அரசுக்கு நெருக்கடி அளிக்க எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

Update: 2021-11-16 02:36 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி, 

15 நாட்களில் நாடாளுமன்றம் கூடும் நிலையில், சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு இயக்குனர்கள் பதவிக்காலத்தை நீட்டிக்க அவசர சட்டம் கொண்டு வந்தது ஏன்? என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி விடுத்துள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது. இதற்கிடையே, சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு இயக்குனர்களின் பதவிக்காலத்தை 2 ஆண்டில் இருந்து 5 ஆண்டாக நீட்டிப்பதற்கான 2 அவசர சட்டங்களை மத்திய அரசு நேற்று முன்தினம் பிறப்பித்தது.

இது பெரும் அரசியல் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இதுபற்றி காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு இயக்குனர்களின் பதவிக்காலத்தை நீட்டித்த முடிவில் எந்த பொதுநலமும் இல்லை. மத்திய அரசின் சுயநலம்தான் தெரிகிறது. எதிர்க்கட்சிகளை குறி வைப்பதற்கும், ஊழல் வழக்குகளில் இருந்து தங்களையும், தங்கள் நண்பர்களையும் பாதுகாத்துக்கொள்வதற்கும் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

இது விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தும் செயல். தங்கள் பதவி நீட்டிப்புக்காக, அரசியல் எஜமானர்களின் கருணையை எதிர்பார்க்கும் சூழ்நிலையை சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு இயக்குனர்களுக்கு ஏற்படுத்தி விட்டனர். அப்படிப்பட்ட நிலையில், அந்த இயக்குனர்கள் எப்படி நியாயமாக பணியாற்றுவார்கள்?

நாடாளுமன்றம் கூடுவதற்கு 15 நாட்களே இருக்கும்போது, நாடாளுமன்றத்தை புறக்கணிக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வந்துள்ளனர். இதற்கு என்ன அவசரம்? இந்த நடவடிக்கை பொதுநலம் என்று கருதினால், நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்ப தயாரா?

நாடாளுமன்ற அதிகாரத்தை குழிதோண்டி புதைத்ததுடன், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுகளையும் மத்திய அரசு மீறியுள்ளது. மிகவும் அரிதாகவே, குறைவான காலத்துக்கு மட்டுமே பதவி நீட்டிப்பு அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி என்பது அரசியல் கட்சிகளின் கூட்டணியாக இல்லாமல், சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை ஆகியவற்றின் கூட்டணியாக செயல்படுகிறது” என்று அவர் கூறினார்.

இதற்கிடையே, இந்த அவசர சட்டங்களை எதிர்த்து மாநிலங்களவையில் தீர்மானம் கொண்டு வருவதற்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நேற்று நோட்டீஸ் அளித்தது. இந்தியாவை, தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வாதிகாரத்துக்கு மாற விடாமல் தடுப்போம் என்று அக்கட்சியின் எம்.பி. டெரிக் ஓ பிரையன் கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த பின்னணியில், முக்கிய அதிகாரிகளின் பதவி நீட்டிப்புக்கும், பணி பலன்கள் கிடைப்பதற்கும் அடிப்படை விதிமுறைகளை மத்திய அரசு நேற்று திருத்தியது. பாதுகாப்பு செயலாளர், உள்துறை செயலாளர், உளவு பிரிவு இயக்குனர், ‘ரா’ செயலாளர் ஆகியோருக்கும் பதவி நீட்டிப்பு அளிக்க இந்த திருத்தம் வழி வகுக்கிறது.

மேலும் செய்திகள்