உத்தரப்பிரதேசம்: கள்ளநோட்டுகள் அச்சடித்த ஒருவர் கைது

கைதானவரிடமிருந்து மடிக்கணினி, கலர் பிரிண்டர், உயர்தர காகிதம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.

Update: 2021-11-23 00:23 GMT
நொய்டா,

உத்தரப்பிரதேசத்தின் பலோங்கி என்னுமிடத்தில் உள்ள ஒரு வீட்டில் கள்ள நோட்டுகள் அச்சிடப்படுவதாக போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. தகவலை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்ததில் அங்கு கள்ளநோட்டு அச்சடிப்பது தெரியவந்தது. 

இதனையடுத்து போலீசார், அங்கு கள்ளநோட்டு அச்சடித்துவந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் மொராதாபாத்தைச் சேர்ந்த நவாப் என்கிற பெரோஸ் என்பதும், அவர் கடந்த 3 மாதங்களாக கள்ளநோட்டு அச்சடித்து வந்தது தெரியவந்தது. ஒருமுறை பலோங்கியில் வசிக்கும் பிஜேந்தர் என்பவர் தனக்கு கள்ளநோட்டு அடிப்பது பற்றி சொல்லித்தந்ததாக தெரிவித்தார். தான் அடித்த கள்ளநோட்டுகளை உள்ளூர் சந்தையிலேயே புழக்கத்தில் விட்டதாக அவர் கூறினார்.

அவரை கைதுசெய்த போலீசார், அவரிடமிருந்து ரூ.69,000 மதிப்புள்ள கள்ளநோட்டுக்களை பறிமுதல் செய்தனர். மேலும் நோட்டு அச்சடிக்க பயன்படுத்திய மடிக்கணினி, கலர் பிரிண்டர், போலி நாணயம் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட உயர்தர காகிதம் ஆகியவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார், நவாப்புக்கு கள்ளநோட்டு அச்சடிக்க சொல்லிக்கொடுத்த பிஜேந்தரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் குற்றவாளிகளுக்கு காகிதம் மற்றும் உபகரணங்களை யார் சப்ளை செய்தார்கள் என்றும் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்