ஒமைக்ரான் பாதித்த நபருடன் தொடர்புடைய 5 நபருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் ஒமைக்ரான் பாதித்த நபருடன் தொடர்புடைய 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-12-02 13:58 GMT

பெங்களூரு,

கொரோனா பாதிப்புகள் உலக அளவில் தீவிர அச்சுறுத்தலாக தொடர்ந்து வரும் நிலையில், தடுப்பூசி பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.  இதனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பாதிக்கப்பட்டு இருந்த உலக நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்ப முயன்று வருகின்றன.

இந்த நிலையில், தென்ஆப்பிரிக்காவில் முதன்முறையாக ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.  இதனை தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது.  இதனால் உலகம் முழுவதுமுள்ள அரசுகள் தொற்று பாதித்த நாடுகளுடனான விமான சேவையை ரத்து செய்தன.

இந்தியாவின் கர்நாடகாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனை மத்திய சுகாதார அமைச்சகம் இன்று உறுதிப்படுத்தி உள்ளது.  அவர்களில் ஒருவர் 66 வயது ஆண்.  மற்றொருவர் 46 வயது ஆண் ஆவார்.

இந்த நிலையில், ஒமைக்ரான் பாதித்த 46 வயது நபருடன் தொடர்புடைய 5 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்துதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

இவர்கள், கடந்த நவம்பர் 22ந்தேதி முதல் 25ந்தேதி வரையில் தொற்று பாதித்த நபருடன் தொடர்பில் இருந்துள்ளனர்.  அவர்களிடம் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன என்று பெங்களூரு நகர நிர்வாகம் தெரிவித்து உள்ளது.  

மேலும் செய்திகள்