ஆன்லைனில் பழகிய பெண்ணை நேரில் சந்திக்க இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தானியர்...!

ஆன்லைன் மூலம் பழகிய பெண்ணை நேரில் சந்திக்க இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தானியரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

Update: 2021-12-06 09:41 GMT
ஜெய்ப்பூர்,

பஞ்சாப் மாநிலம் ஸ்ரீகங்காநகரில் உள்ள சர்வதேச எல்லைப்பகுதியில் இந்திய எல்லைப்பாதுகாப்பு படையினர் நேற்று முன் தினம் இரவு வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது, பாகிஸ்தானில் இருந்து அத்துமீறி இந்திய எல்லைக்குள் ஒருநபர் வருவதை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர். அந்த நபர் பயங்கரவாதியாக இருக்கலாம் என்பதால் அதிரடியாக செயல்பட்ட படையினர் இந்திய எல்லைக்குள் நுழைந்த அவரை சுற்றுவளைத்து பிடித்தனர்.

இதனை தொடர்ந்து பிடிபட்ட நபர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட நபர் பாகிஸ்தானை சேர்ந்த 21 வயது நிரம்பிய முகமது அஹ்மர் என்பது தெரியவந்தது. 

பாகிஸ்தானை சேர்ந்த முகமது ஆன்லைன் மூலம் மும்பையை சேர்ந்த பெண்ணுடன் பழகி வந்துள்ளார். அந்த பெண்ணை நேரில் சந்திக்க திட்டமிட்ட முகமது பஞ்சாப் எல்லைவழியாக இந்தியாவுக்குள் நுழைந்து மும்பை செல்ல திட்டமிட்டுள்ளார். 

மும்பைக்கு சென்று தான் ஆன்லைன் மூலம் பழகிய பெண்ணை நேரில் சந்திக்க முகமது திட்டமிட்டுள்ளார் என்று போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

ஆனாலும், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்த முகமதுவிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். முகமது தற்போது ஸ்ரீகங்காநகர் போலீஸ் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்