மக்கள் விரும்பும் உணவை உண்பதை நீங்கள் எப்படி தடுக்க முடியும்? - அகமதாபாத் மாநகராட்சிக்கு ஐகோர்ட்டு கேள்வி

மக்கள் விரும்பும் உணவை உண்பதை நீங்கள் எப்படி தடுக்க முடியும் என்று அகமதாபாத் மாநகராட்சிக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

Update: 2021-12-10 15:33 GMT
அகமதாபாத்,

குஜராத் மாநிலம் அகமதாபாத் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தெருவோர அசைவ உணவுக்கடைகளை அகற்ற அம்மாநகராட்சி ஆணையர் அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனையடுத்து, அகமதாபாத்தில் தெருவோரங்களில் அசைவ உணவுக்கடைகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். சாலையோரங்களை ஆக்கிமித்து அமைக்கப்பட்டுள்ள உணவகங்கள் மட்டுமே அகற்றப்படுவதாக மாநகராட்சி தரப்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையில், மாநகராட்சி சாலையோரங்களில் உள்ள அசைவ உணவுக்கடைகளை மட்டும் வேண்டுமென்றே அப்புறப்படுத்துவதாக உணவக உரிமையாளர்கள் குஜராத் ஐகோர்ட்டில் வழக்குத்தொடர்ந்தனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வைஷ்னவ், அகமதாபாத் மாநகராட்சி மீது சரமாரி கேள்வி எழுப்பினார். நீதிபதி கூறியதாவது,

உங்களுக்கு என்ன தான்  (அகமதாபாத் மாநகராட்சி)  பிரச்சினை? எனது வீட்டிற்கு வெளியே என்ன சாப்பிட வேண்டும் என்பதை நீங்கள் எப்படி முடிவு செய்ய முடியும்? மக்கள் விரும்பும் உணவை உண்பதை நீங்கள் எப்படி தடுக்க முடியும்? திடீரென்று அதிகாரத்தில் இருக்கும் ஒருவர் இதைத்தான் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்களா? 

நான் என்ன சாப்பிட வேண்டும் என்று மாநகராட்சி கமிஷனர் முடிவு செய்வாரா? நீரிழிவு நோய் ஏற்படும் என்பதால் கரும்புச்சாறு கூடிக்காதீர்கள் என்று நாளை அவர்கள் என்னிடம் கூறுவார்கள். காபி உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறுவார்கள்’ என்றார்.

மேலும் செய்திகள்