அரசு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி அரசியல் பிரசாரம் - தலைமை தேர்தல் ஆணையருக்கு காங். கடிதம்

அரசு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி அரசியல் பிரசாரத்தில் ஈடுபடுவதாகவும், அதை தடுக்க வேண்டும் எனவும் தலைமை தேர்தல் ஆணையருக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது.

Update: 2022-01-05 08:09 GMT
லக்னோ,

403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு வரும் மார்ச் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பல்வேறு தரப்பினர் இடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், எஐஎம்ஐஎம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களமிறங்க உள்ளன. தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு கட்சிகளும் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளன. 

இதற்கிடையில், தேர்தல் நெருங்கி வரும் நிலையில் உத்தரபிரதேசத்தில் பல்வேறு திட்ட பணிகளை பிரதமர் மோடி, முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்து வருகின்றனர். அரசு நிகழ்ச்சியான திட்டப்பணிகளுக்கான திறப்பு விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாக்களின் போது பிரதமர் மோடி அரசியல் சார்ந்த கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், அரசு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி அரசியல் பிரசாரத்தில் ஈடுபடுவதாகவும், அதை தடுக்க வேண்டும் எனவும் தலைமை தேர்தல் ஆணையருக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது. இது தொடர்பாக உத்தரபிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திராவுக்கு கடிதம் எழுதியுள்ளது. 

இதில், கொரோனா 3-வது அலை ஏற்படலாம் என கணிக்கப்பட்டுள்ளதால் பெரிய அளவில் நடைபெறும் அரசியல் கூட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும். அரசு பணத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி மற்றும் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அரசியல் ரீதியிலான கருத்துக்களை தெரிவிப்பதை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும்’ என காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது.

மேலும் செய்திகள்