கொரோனா பரவல் அதிகரிப்பு; மாநில முதல்-அமைச்சர்களுடன் விரைவில் பிரதமர் மோடி ஆலோசனை

கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் விரைவில் மாநில முதல்-அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

Update: 2022-01-09 14:49 GMT

புதுடெல்லி,

இந்தியாவில் தினமும் 10 ஆயிரத்துக்கு கீழே பாதிப்பு ஏற்பட்டு கொரோனா 2-வது அலை இறுதிக்கட்டத்தை அடைந்து வந்த நேரத்தில், அழையா விருந்தாளியாக இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் நுழைந்தது. அதனை தொடர்ந்து கொரோனா வைரஸ் மறுபடியும் காட்டுத்தீயாக பரவ தொடங்கி இருக்கிறது.

இதன் காரணமாக தினமும் 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி வருகிறது. பரவலை கட்டுப்படுத்த நாட்டில் பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை, ஊரடங்குகளை அறிவித்து வருகின்றன. தமிழகத்தில் இரவு ஊரடங்கு அமலில் உள்ளது.  ஞாயிற்று கிழமையான இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  நாடு முழுக்க கொரோனா பரவல் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியிருக்கிறது. 

இந்த நிலையில், கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.  இந்த ஆலோசனைக்கூட்டத்தில் தடுப்பூசி பணிகள், மருத்துவ உட்கட்டமைப்புகளை தயார்படுத்துவது உள்ளிட்டவை குறித்து மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் விரைவில் மாநில முதல்-அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளேன் என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

இதன்பின்பு, மாவட்ட அளவில் சுகாதார உட்கட்டமைப்பினை மேம்படுத்தும்படி மத்திய மந்திரிகள், அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுரை வழங்கியுள்ளார்.  கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலங்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என அவர் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்