உத்தரபிரதேசத்தில் மேலும் ஒரு எம்.எல்.ஏ. பாஜகவில் இருந்து விலகல்

உத்தரபிரதேசத்தில் மேலும் ஒரு பாஜக எம்.எல்.ஏ.கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

Update: 2022-01-13 08:22 GMT
லக்னோ,
 
உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது அமைச்சரவையில் மந்திரியாக இடம்பெற்றிருந்தவர் பாஜக எம்.எல்.ஏ. பிரசாத் மவுரியா. 

இதனிடையே யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பிரசாத் மவுரியா தனது மந்திரி பதவியை கடந்த செவ்வாய்க்கிழமை ராஜினாமா செய்துவிட்டு சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். இந்த சம்பவம் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள உத்தரபிரதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பிரசாத் மவுரியாவின் ஆதரவாளரான மற்றொரு பாஜக எம்.எல்.ஏ. அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

அம்மாநிலத்தின் பிட்ஹுனா தொகுதி எம்.எல்.ஏ.வான வினய் சக்யா பாஜகவில் இருந்து இன்று விலகியுள்ளார். தனது விலகல் கடித்ததை கட்சி தலைமைக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார். பிரசாத் மவுரியா அடித்தட்டு மக்களின் குரல் என கூறியுள்ள வினய் சக்யா அவர்தான் நமது தலைவர் என தெரிவித்துள்ளார். மேலும், நான் பிரசாத் மவுரியாவுடன் இருப்பேன் என தெரிவித்துள்ளார். 

பாஜகவில் இருந்து விலகிய எம்.எல்.ஏ. வினய் சக்யா விரைவில் சமாஜ்வாதி கட்சியில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தரபிரதேசத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் வர உள்ள நிலையில் ஆளும் பாஜகவில் இருந்து பல்வேறு தலைவர்கள் விலகி மாற்று கட்சிகளில் இணையும் நிகழ்வு அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்