சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று மகரஜோதி தரிசனம்…!

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரஜோதி தரிசனம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

Update: 2022-01-13 23:45 GMT
திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. மகர விளக்கு பூஜையின் போது அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க ஆபரணங்கள் (திருவாபரணங்கள்) அடங்கிய 3 பெட்டிகள் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து நேற்று மதியம் 1 மணிக்கு ஊர்வலமாக புறப்பட்டது. திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட அய்யப்ப பக்தர்கள் தலைச்சுமையாக எடுத்துச் சென்றார். 

மகரஜோதி நாளில் நடைபெறும் முக்கிய பூஜைகளில் ஒன்று மகரசங்கராந்தி பூஜை. சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு செல்லும் நேரத்தில் ஐயப்பனுக்கு இந்த பூஜை நடத்தப் படுகிறது. இன்று மதியம் 2:29 மணிக்கு இந்த பூஜை நடைபெறுகிறது. இந்த நேரத்தில் திருவிதாங்கூர் மன்னர்களின் அரண்மனையான கவடியாரில் இருந்து கொடுத்துவிடப்படும் நெய் தேங்காய் உடைக்கப்பட்டு பாத்திரத்தில் ஊற்றாமல், நேரடியாக அய்யப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படும்.

பக்தர்களின் சரண கோஷம் முழங்க ஆபரண பெட்டிகள் இன்று மாலை 6.20 மணிக்கு சபரிமலை சன்னிதானம் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு திருவாபரண பெட்டிகளுக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். 
தொடர்ந்து பதினெட்டாம் படி வழியாக கொண்டு செல்லப்படும் திருவாபரணங்களை தந்திரியும், மேல்சாந்தியும் பெற்றுக்கொள்வர்.

பின் நடை அடைத்து அய்யப்பனுக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்படும். தொடர்ந்து நடைதிறந்து தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து 6.30 மணிக்கு அலங்கார தீபாராதனைக்கு பிறகு பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் காட்சி தரும். தொடர்ந்து மகரஜோதி மூன்று முறை காட்சிதரும்.

மகர விளக்கையொட்டி பக்தர்கள் சன்னிதானம், பம்பை உள்ளிட்ட 8 இடங்களில் இருந்து மகர ஜோதியை தரிசனம் செய்வதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்