கேரளாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் இல்லை - பினராயி விஜயன் தகவல்

கேரளாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் இல்லை என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-01-20 04:25 GMT
திருவனந்தபுரம்,

கேரள மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமெரிக்காவில் இருந்து முதல்- மந்திரி பினராயி விஜயன் ஆன்லைன் மூலமாக பங்கேற்றார்.

கூட்டத்திற்கு பின்னர் அவர் கூறியதாவது:-

கேரளாவில் கொரோனா, ஒமைக்ரான் பாதிப்பு மிக வேகமாக பரவி வருகிறது. மாநில அளவில் தொற்று பரவல் விகிதம் 35 சதவீதமாக உள்ளது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் தொற்று பரவல் விகிதம் 47.8 சதவீதமாக உள்ளது. அதாவது பரிசோதனை செய்யப்படுபவர்களில் பாதி பேருக்கு கொரோனா உறுதி செய்யப்படுவதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

இந்த நிலையில் 10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்துவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. 

கேரளாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். மாநிலத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை. மேலும் கொரோனா ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் தேவையான கூடுதல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்