மும்பையில் 20 மாடி குடியிருப்பு கட்டிட பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி

மும்பையில் 20 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலியானார்கள். 23 பேர் காயமடைந்தனர்.

Update: 2022-01-22 19:36 GMT
மும்பை தார்டுதேவ், கவாலியா டேங்க் அருகில் நானா சவுக் பகுதியில் பாட்டியா ஆஸ்பத்திரி எதிரில் ‘சச்சினாம் ஹெயிட்ஸ்’ என்ற 20 மாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது.

திடீர் தீ விபத்து

இந்த கட்டிடத்தின் 19-வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று காலை 7.28 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. தீ அந்த தளத்தின் அருகில் உள்ள மற்ற வீடுகளுக்கும் பரவியது. லிப்ட் பாதை வழியாக கட்டிடத்தின் அனைத்து தளங்களுக்கும் புகை பரவியது. அந்த கட்டிடம் முழுவதையும் கரும்புகை சூழ்ந்தது கொண்டது.

தீ விபத்தை அறிந்த பலர் அலறியடித்து கொண்டு கீழே ஓடி வந்தனர். மேலும் சம்பவம் நடந்தபோது வீடுகளில் பலர் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தனர். மூச்சு திணறல் மற்றும் அதிர்ச்சியில் எழுந்த அவர்கள் தலைதெறிக்க வெளியே ஓடி வந்தனர். அப்போது வீடுகளில் இருந்த சில பொருட்கள் வெடித்து சிதறும் பயங்கர சத்தம் கேட்டது. இது தப்பிக்க முயற்சித்தவர்களை கதிகலங்க வைத்தது.

போராடி மீட்பு

தீ விபத்து ஏற்பட்ட 19-வது மாடி மற்றும் 20, 18-ம் மாடிகளில் வசித்த பலர் தப்பிக்க முடியாமல் கரும்புகையில் சிக்கி கொண்டு தவித்தனர். அவர்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள கூக்குரலிட்டனர்.

இதற்கிடையே தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் 21 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்தனர். அவர்கள் கட்டிடத்தில் சிக்கி இருந்த பலரை உயிரை பணயம் வைத்து மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சுமார் 5½ மணி நேரம் போராடி கட்டிடத்தில் எரிந்த தீயை அணைத்தனர்.

6 பேர் பலி

இதில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் தீக்காயத்தாலும், ஒருவர் கரும்புகையை சுவாசித்ததாலும் உயிரிழந்ததும், மற்ற 4 பேர் தீக்காயம் மற்றும் கரும்புகையை சுவாசித்ததால் பலியானதாக டாக்டர் ஒருவர் கூறினார்.

இதேபோல 23 பேர் தீ விபத்தில் காயம் அடைந்தனர். அவர்கள் வெவ்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பாட்டியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 17 பேரில் 12 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தீ விபத்தில் உறவுகளை பறி கொடுத்தவர்கள் துக்கம் தாங்காமல் கதறி அழுதனர். மேலும் உடைமைகளை இழந்தவர்களும் சோகத்தில் மூழ்கினர்.

இதற்கிடையே காயம் அடைந்தவர்களை ‘கொரோனா இல்லை’ என்ற சான்றிதழ் கேட்டும், முன்பணம் செலுத்த வற்புறுத்தியும் அருகில் உள்ள 3 தனியார் ஆஸ்பத்திரிகள் சிகிச்சைக்கு அனுமதிக்க மறுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

காரணம் என்ன?

இந்தநிலையில் தீ விபத்து நடந்த குடியிருப்பு கட்டிடத்தை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மகனும், மந்திரியுமான ஆதித்ய தாக்கரே பார்வையிட்டார். மேலும் அவர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், "மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த துரதிருஷ்ட சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களை சிகிச்சைக்கு சேர்க்க சில ஆஸ்பத்திரிகள் மறுத்ததாக புகார் வந்தது. எனினும் அந்த ஆஸ்பத்திரிகள் விபத்தில் காயமடைந்தவர்களை சிகிச்சைக்கு அனுமதித்ததாக என்னிடம் விளக்கம் அளித்து உள்ளன" என கூறினார்.

மோடி இரங்கல்

இதேபோல தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பலியானவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு சார்பில் தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் பிரதம மந்திரியின் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்து உள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும் இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு அவர் காங்கிரஸ் தொண்டர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கிடையே மராட்டிய சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், "அருகில் உள்ள சில ஆஸ்பத்திரிகள் தீ விபத்தில் காயமடைந்தவர்களை சிகிச்சைக்கு அனுமதிக்காததால் பலி எண்ணிக்கை அதிகரித்த தகவல் கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இது உண்மையெனில் மாநகராட்சி நிர்வாகம் உயிர் பலிக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் " என டுவிட்டரில் கூறியுள்ளார்.

மும்பையில் இதுபோன்ற தீ விபத்துகள் அடிக்கடி நடந்து வருகின்றன. தொடரும் தீ விபத்துகளும், பெரும் உயிரிழப்புகளும் மக்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்