மேற்கு வங்காள அரசியல் நிலவரம் பீதியூட்டும்படி இருக்கிறது; கவர்னர் பகிரங்க குற்றச்சாட்டு!

தான் கேட்ட கேள்விகளுக்கு மம்தா பானர்ஜி பதில் அளிப்பதில்லை என்று அம்மாநில கவர்னர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2022-01-26 01:58 GMT
கொல்கத்தா, 

மேற்கு வங்காளத்தில் கவர்னர் ஜெகதீப் தங்காருக்கும், முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.

இந்தநிலையில், தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, மேற்கு வங்காள சட்டசபைக்கு கவர்னர் தங்கார் நேற்று சென்றார். அங்குள்ள அம்பேத்கர் சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்குள்ள புல்வெளியில் கவர்னர் தங்கார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

சபாநாயகர் பீமன் பானர்ஜி சற்று தொலைவில் நின்று கொண்டிருக்கும்போது, அவரையும், அரசையும் கவர்னர் சரமாரியாக விமர்சித்தார்.

அவர் கூறியதாவது:-

மேற்கு வங்காளத்தில் வாக்காளர்களுக்கு சுதந்திரமாகவும், அச்சமின்றியும் வாக்களிக்கக்கூட உரிமை இல்லை. தங்கள் சொந்த விருப்பப்படி ஓட்டளிக்க சென்றவர்கள் அதற்கான விலை கொடுக்க வேண்டி இருந்தது.

தேர்தலுக்கு பிந்தைய வன்முறை வரலாறு காணாதவகையில் இருந்தது. அதுகுறித்து தேசிய மனித உரிமை கமிஷன் அமைத்த உண்மை கண்டறியும் குழு, மேற்கு வங்காளத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறாமல் ஆட்சியாளர் வகுத்த விதிமுறைதான் நடைமுறையில் இருப்பதாக கூறியது.

அதுகூட குறைவான மதிப்பீடுதான். உண்மையில், மேற்கு வங்காளத்தில் அரசியல் நிலவரம் பயங்கரமாக இருக்கிறது. பீதியூட்டும் வகையில் உள்ளது. முதல்-மந்திரி மம்தா பானர்ஜி எத்தனையோ சந்தர்ப்பங்களில் நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை. அதுபோல், சபாநாயகர் பீமன் பானர்ஜியும் நான் கேட்ட தகவல்களை கொடுப்பது இல்லை. அவர் அரசியல் சட்ட விதிமுறைகளை மீறி நடந்து கொள்கிறார். கவர்னரை பற்றி என்ன வேண்டுமானாலும் பேச தனக்கு உரிமம் இருப்பதாக அவர் நினைக்கிறார்.

சட்டசபையில் எனது உரை 2 தடவை தடுக்கப்பட்டது. சட்டசபையில் கவர்னர்தான் நம்பர் 1 என்று அவருக்கு தெரியாதா? சட்டசபையில் மீண்டும் எனது உரை தடுக்கப்பட்டால், சபாநாயகர், சட்டப்படி விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும். எந்த மசோதா தொடர்பான கோப்புகளோ, அரசின் பரிந்துரையோ என்னிடம் நிலுவையில் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில், சபாநாயகர் பீமன் பானர்ஜி கூறியதாவது:-

அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தவே கவர்னர் வந்தார். ஆனால் அவர் அதை பயன்படுத்தி, பேட்டி அளிப்பார் என்று எங்களுக்கு தெரியாது. இது தேவையற்றது. மரியாதை குறைவானது.

சட்டசபையில் அவர் தனது அதிகார வரம்புக்குட்பட்டு செயல்பட வேண்டும். நானும் எனது வரம்புக்குள் செயல்படுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்