“போரை நிறுத்துமாறு புதினுக்கு என்னால் உத்தரவிட முடியுமா?” - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா

போரை நிறுத்துவது சுப்ரீம் கோர்ட்டின் அதிகார வரம்பிலா இருக்கிறது? என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2022-03-03 18:09 GMT
புதுடெல்லி,

உக்ரைன் மீது ரஷிய படைகள் 8-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. மறுபுறம் உக்ரைன் ராணுவம், ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 

இதற்கிடையில் உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் போர் நடைபெறும் பகுதிகளில் சிக்கியிருக்கும் மாணவர்கள் எல்லை பகுதிகளுக்கு செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு, தலைமை நீதிபதி என்.வி.ரமணா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவர், “உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்களை மீட்க என்ன நடவடிக்கையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எடுத்துள்ளார் என்று சமூக வலைதளங்களில் எனக்குக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ரஷ்ய அதிபர் புதினை போரை நிறுத்துங்கள் என்று என்னால் உத்தரவிட முடியுமா? அது என் அதிகார வரம்பிலா இருக்கிறது? இந்திய மாணவர்களின் நிலையைக் குறித்து அனைவருக்குமே வருத்தம் உள்ளது. மாணவர்களை பத்திரமாக மீட்க அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய அரசு தனது கடமையைச் செய்கிறது” என்று கூறினார். தொடர்ந்து அட்டர்னி ஜெனரலிடம், மீட்புப் பணிகளில் இயன்ற உதவியை செய்யுமாறு நீதிபதி ரமணா உத்தரவிட்டார். 

மேலும் செய்திகள்