மீடியா ஒன் செய்தி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி

மீடியா ஒன் நிறுவன ஒளிபரப்புக்கு தடை விதித்த மத்திய அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த சுப்ரீம் கோர்ட், மார்ச் 26 ஆம் தேதி விரிவான பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

Update: 2022-03-15 12:01 GMT
புதுடெல்லி,

மலையாள தொலைக்காட்சி செய்தி சேனலான மீடியா ஒன் டிவியின் ஒளிபரப்பு,  மத்திய அமைச்சகத்தின் அனுமதி மறுப்பால் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி முதல் தடைப்பட்டது.  

தேசிய  பாதுகாப்பு காரணங்களுக்காக மத்திய உள்துறை அமைச்சகம் இந்த சேனலுக்கு  அனுமதி வழங்கவில்லை என்பதால் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் சேனலின் உரிமத்தை புதுப்பிக்க மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.  மீடியா ஒன்  சேனலில் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் கேரளப் பிரிவைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்குதாரர்களாக உள்ளனர். 

 மத்திய அரசின் தடைக்கு எதிராக கேரள ஐகோர்ட்டை மீடியா ஒன் நிறுவனம் நாடியது. ஆனால், மீடியா ஒன் நிறுவனத்தின் கோரிக்கையை கேரள ஐகோர்ட் நிராகரித்தது. இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டை மீடியா ஒன் நிறுவனம் அணுகியது.  

அப்போது மத்திய அரசு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்ட நிலையில் இன்று மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,  மீடியா ஒன் நிறுவன ஒளிபரப்புக்கு தடை விதித்த மத்திய அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த சுப்ரீம் கோர்ட், மார்ச் 26 ஆம் தேதி விரிவான பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. 

மேலும் செய்திகள்