ஆம் ஆத்மி முதல்-மந்திரிக்கு சித்து புகழாரம்; காங்கிரசில் மீண்டும் கலவரம்

பஞ்சாப்பின் புதிய முதல்-மந்திரியாக பொறுப்பேற்ற ஆம் ஆத்மியை சேர்ந்த பகவந்த் மானுக்கு சித்து புகழாரம் சூட்டியது காங்கிரசில் சலசலப்பு ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-03-17 12:10 GMT


புதுடெல்லி,



அண்மையில் நடந்து முடிந்த உ.பி., உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை தழுவியது.

இவற்றில், பஞ்சாப் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 117 இடங்களில் 92 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை கைப்பற்றியது.  இதனை தொடர்ந்து அக்கட்சியின் முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்த பகவந்த் மான் (வயது 48), பஞ்சாப்பை சேர்ந்த பிரபல சுதந்திர போராட்ட வீரரான பகத் சிங்கின் பூர்வீக கிராமமான கத்கர் காலனில் பதவியேற்பு விழாவை நடத்த நடவடிக்கை மேற்கொண்டார்.

தேர்தலுக்குப்பின் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூடி பகவந்த் மானை சட்டமன்ற கட்சித்தலைவராக (முதல்-மந்திரி) தேர்வு செய்தனர்.  இதன்பின், கவர்னரை சந்தித்து மாநிலத்தில் புதிய அரசை அமைக்க அவர் உரிமை கோரினார்.  இதனை தொடர்ந்து கவர்னர் பன்வாரிலால் புரோகித்தும், பகவந்த் மானை புதிய அரசு அமைக்க அழைப்பு விடுத்தார்.

அதன்படி நேற்று மதியம் 1.25 மணிக்கு கத்கர் காலனில் பதவியேற்பு விழா நடந்தது.  இந்த நிலையில் 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு, மாநில தலைவர்களின் பதவியை பறிக்க சோனியா காந்தி அதிரடியாக நேற்று முடிவு எடுத்தார்.

இதன்படி, உ.பி. மாநில காங்கிரஸ் தலைவர் அஜய்குமார் லல்லு, உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கணேஷ் கொடியால், மணிப்பூர் காங்கிரஸ் தலைவர் நமீரக்பம் லோகன்சிங், பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சித்து, கோவா காங்கிரஸ் தலைவர் கிரிஷ் சோடங்கர் ஆகியோரை பதவியில் இருந்து ராஜினாமா செய்யும்படி உத்தரவிட்டார்.

இவர்களில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து நேற்று ராஜினாமா செய்தார். காங்கிரஸ் பதவியில் இருந்து விலகும் தனது கடிதத்தை சோனியா காந்திக்கு சித்து அனுப்பினார்.

இந்நிலையில், சித்து டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், பகவந்துக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.  அதில், ஒருவரும் எதிர்பாராத மகிழ்ச்சியான நபரிடம் இருந்து...  மலை போன்ற எதிர்பார்ப்புகளுடன் பஞ்சாப்பில் குற்ற செயல்களுக்கு எதிரான ஒரு புதிய சகாப்தத்தினை பகவந்த் மான் செயல்படுத்த இருக்கிறார்... மக்களுக்கு ஆதரவான நன்மை பயக்கும் கொள்கைகளுடன் பஞ்சாப்பை மீண்டும் சீரிய பாதைக்கு கொண்டு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது.  வாழ்த்துகள் என தெரிவித்து உள்ளார்.

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகிய ஒரு நாளுக்குள், ஆம் ஆத்மியின் முதல்-மந்திரி பகவந்துக்கு ஆதரவாக சித்து வெளியிட்ட டுவிட்டர் பதிவானது காங்கிரசுக்குள் சலசலப்பு ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்