எரிபொருள் விலை உயர்வு; தொடர் அமளியால் ராஜ்யசபை நாள் முழுவதும் ஒத்தி வைப்பு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்ற மேலவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-04-04 11:02 GMT


புதுடெல்லி,



நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் ஆகிய எரிபொருட்களின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.  இதனால், சரக்கு வாகன போக்குவரத்து நிறுவனங்கள் எரிபொருள் விலை உயர்வை எதிர்கொள்ள வாகன கட்டணங்களை அதிகரிக்க பரிசீலித்து வருகிறது.  இதேபோன்று, அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர கூடிய நிலை காணப்படுகிறது. 

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் ஆகியவற்றின் விலை உயர்வால் பொதுமக்களும் திண்டாடி வருகின்றனர்.  இந்நிலையில், நாடாளுமன்ற மேலவை இன்று கூடியதும் அவை உறுப்பினர்கள் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கவனத்தில் கொண்டும் கோஷங்களை எழுப்பி அவையில் அமளியில் ஈடுபட்டனர்.

அவர்களை அமரும்படி அவை தலைவர் கூறினார்.  எனினும், உறுப்பினர்கள் தொடர்ந்து அவை நடவடிக்கையை முடக்கினர்.  இதனால், மேலவை நண்பகல் வரை ஒத்தி வைக்கப்படுகிறது என்று கூறி சபாநாயகர் அவையை ஒத்தி வைத்துள்ளார்.

எனினும், அவை மீண்டும் கூடியதும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் மீண்டும் அவை நடவடிக்கையை முடக்கினர்.  எரிபொருட்கள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.  இதனால், சபாநாயகர் அவையை 2 மணிவரை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

இதன்பின்னர் பிற்பகல் 2 மணிக்கு பின் அவை மீண்டும் கூடியதும், தி.மு.க. எம்.பி. சண்முகம் பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி அளித்ததும், அவையில் எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட தொடங்கின.  பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு பற்றி விவாதம் நடத்த உறுப்பினர்கள் கோரினர்.  எனினும், இதனை சபாநாயகர் நிராகரித்து விட்டார்.

காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் தங்களது இருக்கைகளில் இருந்தபடி கோஷம் எழுப்பியும், விவாதம் நடத்த கோரி வேண்டுகோள் விடுத்தபடியும் இருந்தனர்.  இதனால், அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்