தஞ்சை தேர் விபத்து: ‘வார்த்தைகளால் விவரிக்க முடியாத சோக சம்பவம்’ - பிரதமர், ஜனாதிபதி இரங்கல்

தஞ்சை தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

Update: 2022-04-27 04:28 GMT
புதுடெல்லி,

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அப்பர் குருபூஜைக்கான சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று அதிகாலை நடைபெற்றது.

அப்போது, தேர் மீது மின்சாரம் பாய்ந்து ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், தஞ்சை தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டின் தஞ்சையில் தேர் திருவிழாவின் போது மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்த சம்பவத்தால் மிகுந்த மனவேதனையடைந்தேன். இந்த துக்கமான சமயத்தில் உறவுகளை இழந்த குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என நம்புகிறேன். 

தஞ்சை தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்ச ரூபாய் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.     

அதேபோல், தஞ்சை தேர் திருவிழாவில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக குடியரசு தலைவரின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள பதிவில், தஞ்சையில் தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து குழந்தைகள் உள்பட பலர் உயிரிழந்துள்ள சம்பவம் வார்த்தைகளால் விவரிக்கமுடியாத சோகம். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’ என்றார்.  


மேலும் செய்திகள்