பேரறிவாளன் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் - இன்று விசாரணை

பேரறிவாளன் வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசின் அறிக்கை மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.

Update: 2022-05-04 00:51 GMT
Image Courtesy: PTI
புதுடெல்லி, 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று ஜாமீனில் உள்ள பேரறிவாளன், தனது தண்டனையை நிறுத்தி வைத்து விடுவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

கடந்த மாதம் (ஏப்ரல்) 27-ந்தேதி நடந்த விசாரணையின்போது, ‘இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை மே 4-ந்தேதிக்கு (இன்று) தள்ளிவைத்ததுடன், எழுத்துப்பூர்வமான வாதங்கள் இருப்பின் அவற்றை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் அனுமதித்தனர்.

இந்தநிலையில் கவர்னரின் பங்கு தொடர்பாக மூத்த வக்கீல் ராகேஷ் துவிவேதி அளித்த 14 பக்க அறிக்கையை தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் நேற்றுமுன்தினம் தாக்கல் செய்துள்ளது. அந்த ஆவணத்தில், சுப்ரீம் கோர்ட்டின் பல்வேறு தீர்ப்புகளும், அரசியலமைப்பு சட்ட அவையில் அம்பேத்கர் பேசிய விவாதமும் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் சட்டசபையின் தீர்மானத்தை ஒருமனதாக முன்மொழிந்த அமைச்சரவையின் முடிவை அமல்படுத்தாமல் கவர்னர் தடுத்து வைத்திருப்பதுடன், இந்த விவகாரத்தை ஜனாதிபதிக்கு பரிந்துரைத்திருப்பது அரசியலமைப்பு சாசனத்தை மீறிய செயலாகும். இதுபோன்ற அதிகாரத்தை கவர்னருக்கு அரசியலமைப்பு சாசனம் 161-வது பிரிவு அளிக்கவில்லை’ என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த வழக்கு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

மேலும் செய்திகள்