கொரோனாவால் இந்தியாவில் தான் அதிக உயிரிழப்பு; உலக சுகாதார அமைப்பின் அறிக்கைக்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்பாக மொத்தம் 47 லட்சத்து 29 ஆயிரத்து 548 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Update: 2022-05-05 15:43 GMT
புதுடெல்லி,

உலக சுகாதார அமைப்பு இன்று வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய கணித மாதிரி மதிப்பீட்டின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட கொரோனா உயிரிழப்புகள் குறித்த தரவுகளை  இந்தியா நிராகரித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- 

உலக அளவில் கொரோனாவால் அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடு இந்தியா. உலகம் முழுவதும் 2020-ஜனவரி முதல் 2021-டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், கொரோனாவால் நேரடியாகவும் மறைமுகமாகவும் மொத்தம் 1.49 கோடிக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

2020-ஜனவரி முதல் 2021-டிசம்பர் வரை, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்பாக மொத்தம் 47 லட்சத்து 29 ஆயிரத்து 548 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்திருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறும்வேளையில், 47 லட்சம் வரையில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என  உலக சுகாதார அமைப்பால் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா உயிரிழப்பு கணக்கீட்டில் ‘கணித மாதிரி மதிப்பீட்டை’ பயன்படுத்தும் உலக சுகாதார அமைப்பின் நடவடிக்கைக்கு, இந்திய அரசு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்தது வந்தது.  

மத்திய சுகாதார அமைச்சகம் இது தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

கணித மாதிரிகளின் அடிப்படையில் அதிகப்படியான இறப்பு மதிப்பீடுகளை திட்டமிடுவதற்கு உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்ட வழிமுறையை இந்தியா தொடர்ந்து எதிர்க்கிறது. 

உலக சுகாதார நிறுவனத்தால் பயன்படுத்தப்படும் கணித மாதிரி முறைகளின், ‘செல்லுபடியும், உறுதியும் மற்றும் தரவு சேகரிப்பு முறையும்’ கேள்விக்குரியவையாக உள்ளன. இந்தியாவின் கருத்துக்களை போதுமான அளவு கவனிக்காமல், அதிகப்படியான இறப்பு மதிப்பீடுகளை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்திய பதிவாளர் ஜெனரல் (ஆர்.ஜி.ஐ) மூலம் சிவில் பதிவு அமைப்பு (சி.ஆர்.எஸ்) மூலம் வெளியிடப்பட்ட உண்மையான தரவுகள் உள்ளன. ஆர்.ஜி.ஐ-ஆல் ஆண்டுதோறும் வெளியிடப்படும் தரவு ‘உள்நாட்டிலும், உலக அளவிலும் ஏராளமான ஆராய்ச்சியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளால்’ பயன்படுத்தப்படுகிறது. அப்படியிருக்கும் போது, இந்தியாவிற்கான அதிகப்படியான இறப்பு எண்ணிக்கையை கணிக்க கணித மாதிரிகள் பயன்படுத்தப்படக்கூடாது. 

பயனுள்ள மற்றும் வலுவான சட்ட அமைப்பு மூலம் சேகரிக்கப்பட்ட இறப்பு தரவுகளின் துல்லியத்தை இந்தியா வழங்கியுள்ளது. இந்த நிலையில், இரண்டாம் நிலை நாடுகளின் வரிசையில் இடம்பிடிக்க இந்தியா தகுதியற்றது. இதுகுறித்த இந்தியாவின் வாதத்திற்கு, உலக சுகாதார நிறுவனம் இன்றுவரை பதிலளிக்கவில்லை.

உலக சுகாதார நிறுவனத்தின் இந்த கணக்கிடும் முறையானது, ‘தரவு சேகரிப்பின் புள்ளியியல் ரீதியாக ஆதாரமற்ற மற்றும் அறிவியல் பூர்வமாக கேள்விக்கு உட்பட்ட வழிமுறையை பிரதிபலிக்கிறது’.  இதன்மூலம், இந்தியாவில் அதிகப்படியான இறப்பு கணிப்புகளை உருவாக்குவதற்காகவே இந்த கணித முறை பயன்பட்டதாக தெரிகிறது. 

தொடர்ந்து, அதிகப்படியான இறப்பு மதிப்பீடுகளைக் கணிக்க, கணித மாதிரிகளைப் பயன்படுத்துவதை இந்தியா கடுமையாக எதிர்க்கிறது.

இவ்வாறு தெரிவித்து இறப்பு எண்ணிக்கை குறித்த தகவல்களையும் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்