132 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள ஐஐஎம்-நாக்பூர் வளாகத்தை திறந்து வைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்!

மாணவர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசினார்.

Update: 2022-05-08 09:00 GMT
நாக்பூர்,

நாக்பூரில் இந்திய மேலாண்மை நிறுவனத்தின்(ஐஐஎம்) நிரந்தர வளாகத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று திறந்து வைத்தார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மராட்டிய மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நாக்பூரில் உள்ள மிஹான், தஹேகான் மவுசாவில் ஐஐஎம் நாக்பூரின் நிரந்தர வளாகத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள் நிதின் கட்கரி, தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:-

“ஐஐஎம்-இல் உள்ள சுற்றுச்சூழல் அமைப்பு மாணவர்களுக்கு பல வாய்ப்புகளை வழங்கும். ஐஐஎம் நாக்பூர் இப்போது தொழில்முனைவோர் பிரிவில் அதிக கவனம் செலுத்தும். மாணவர்கள் வேலை தேடுபவர்களுக்குப் பதிலாக வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும் என்ற மனநிலையை வளர்க்க ஐஐஎம் நாக்பூர் பாடுபடும்.

பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் போதெல்லாம், அவர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். மேலும் பெண்கள் இந்த கல்வி நிறுவனத்தில் அதிக எண்ணிக்கையில் சேருவார்கள் என்று நான் நம்புகிறேன்.

கல்வி நிறுவனங்கள் வெறும் கற்றலுக்கான இடங்கள் மட்டுமல்ல; நம் ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள, சில சமயங்களில் மறைந்திருக்கும் திறமைகளை மெருகூட்டும் இடம் அது” என்று பேசினார். அதனை தொடர்ந்து அவர் வளாகத்தை சுற்றிப் பார்த்தார்.
தஹேகான் மவுசாவில் உள்ள ஐஐஎம்-இன் நிரந்தர வளாகம், நாக்பூரின் மிஹான் புறநகர்ப் பகுதியில் கட்டப்பட்டுள்ளது. 132 ஏக்கர் பரப்பில், 600 மாணவர்கள் படிக்கும் வகையில் இந்த கல்வி வளாகம் அமைந்துள்ளது. 

மேலும் செய்திகள்