பிளஸ் 2 படிக்கும் பெண்ணை கடத்திய 5 வாலிபர்கள் கைது; மாணவியை பெற்றோர் நிராகரித்த சோகம்

பத்தினம்திட்டா அருகே பிளஸ் 2 மாணவியை கடத்தி சென்ற 5 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2022-05-09 10:08 GMT
மாணவியை கடத்திய வாலிபர்கள்
கேரளா:

பிளஸ் 2 மாணவியான காதலியை தனது 4 நண்பர்களுடன் கடத்திச் சென்ற ஐந்து வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது பற்றி கூறப்படுவது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள அற்றிங்கள் பகுதியை சேர்ந்தவர் ரமீஸ் (வயது 24). இவரது நண்பர்கள் செம்பருதி பகுதியைச் சேர்ந்த முனீர்(24). வர்க்கலா பகுதியைச் சேர்ந்தவர் அமீர்கான் (25), ஆஷீப்(23), அஜய் குமார் (23).

இதில் ரமீஸ் பத்தினம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த பிளஸ்டூ மாணவியை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனால் ரமீஸ் தனது நண்பர்களின் உதவியுடன் காதலியை கடத்த திட்டமிட்டுள்ளார். 

இதையொட்டி கடந்த வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் ரமீஸ் தனது நண்பர்கள் உதவியுடன் மாணவியின் வீட்டுக்கு சென்று கதவை தட்டியுள்ளார். அப்போது மாணவியின் பெற்றோர் கதவை திறக்காததால் கோபமடைந்த 5 பேரும் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். 

அங்கிருந்த மாணவியின் பெற்றோரை அடித்து உடைத்து காயப்படுத்தினார்கள். பெற்றோரின் கதறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களையும்  ஆயுதங்களை காட்டி மிரட்டி ஓட வைத்தனர்.

பின்பு அங்கு இருந்த பிளஸ் 2 மாணவியை கடத்தி சென்ற போது தான் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் காதலனுடன் சென்றதாக கூறப்படுகிறது. இருப்பினும் மாணவியின் பெற்றோர்கள் அயூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்கள்.

போலீசார் புகாரை பெற்றுக்கொண்டு ஐந்து வாலிபர்களையும் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை மாணவியுடன் ஐந்து வாலிபர்களையும் போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். 

5 வாலிபர்கள் மீதும் ஆட்கடத்தல், கொலை முயற்சி போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மாணவியை பெற்றோர்கள் ஏற்காத காரணத்தினால் பாதுகாப்பு மையத்தில் போலீசார் மாணவியை ஒப்படைத்து பாதுகாத்து வருகிறார்கள். 

மேலும் செய்திகள்