பேனர் வைத்ததாக 264 வழக்குகள் பதிவு-கர்நாடக ஐகோர்ட்டில், மாநகராட்சி தகவல்

பெங்களூருவில் விதிமுறைகளை மீறி பிளக்ஸ், பேனர்கள் வைத்ததாக 264 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக கர்நாடக ஐகோர்ட்டில், மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

Update: 2023-08-31 18:45 GMT

பெங்களூரு:-

ரூ.50 ஆயிரம் அபராதம்

பெங்களூருவில் விதிமுறைகளை மீறி பிளக்ஸ், பேனர்கள் வைக்கப்படுவதாகவும், இது நகரின் அழகை கெடுக்கும் விதமாக இருப்பதாகவும், நகரில் இருக்கும் பிளக்ஸ், பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரி மாயகே கவுடா என்பவர் கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பி.பி.வராலே முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

கடந்த விசாரணையின் போது விதிமுறைகளை மீறி பிளக்ஸ், பேனர் வைப்போருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கவும் பெங்களூரு மாநகராட்சிக்கு, ஐகோர்ட்டு அறிவுறுத்தி இருந்தது. இந்த பொது நல மீதான விசாரணை மீண்டும் தலைமை நீதிபதி பி.பி.வராலே முன்னிலையில் நடைபெற்றது. பெங்களூரு மாநகராட்சி சார்பில் மூத்த வக்கீல் என்.கே.ரமேஷ் ஆஜராகி வாதிட்டார்.

264 வழக்குகள் பதிவு

அப்போது விதிமுறைகளை மீறி பிளக்ஸ், பேனர்கள் வைத்தோர் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து வக்கீல் என்.கே.ரமேஷ் தலைமை நீதிபதியிடம் விளக்கம் அளித்தாா.

அதன்படி, பெங்களூருவில் ஆகஸ்டு மாதம் 2-ந் தேதியில் இருந்து விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டு இருந்த 923 பிளக்ஸ், பேனர்கள், விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளன. விதிமுறைகளை மீறியவர்கள் மூது 369 புகார்கள் அளிக்கப்பட்டு இருந்தது. அந்த புகார்களின் பேரில் 264 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக என்.கே.ரமேஷ் தெரிவித்தார்.

மேலும் பெங்களூரு 8 மண்டலங்களின் சிறப்பு கமிஷனர்களுடன் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தப்பட்டு, பிளக்ஸ், பேனர்களை அகற்ற உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து, இந்த மனு மீதான விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்து தலைமை நீதிபதி பி.பி.வராலே உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்