திருட்டு வழக்கில் 3 பேர் கைது

உப்பள்ளியில் திருட்டு வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்து ரூ.53 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2023-02-02 20:20 GMT

உப்பள்ளி:-

உப்பள்ளி விமான நிலையம் அருகே கோகுல்ரோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் காலிமிர்ச்சி தலைமையிலான போலீசார் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்தப்பகுதியில் சந்தேகப்படும்படியாக 3 பேர் நின்று கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் போலீசாரை பார்த்ததும் அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். உடனே சுதாரித்து கொண்ட போலீசார், அவர்கள் 3 பேரையும் சுற்றி வளைத்து மடக்கி படித்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேரிடமும் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் துமகூருவை சேர்ந்த தேவ்நாத் (வயது 32), தார்வாரை சேர்ந்த வீரேந்திரா (28), திப்பண்ணா (30) என்பதும், இவர்கள் உப்பள்ளி, கொப்பல், பெலகாவி, துமகூரு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. ஏற்கனவே வெவ்வேறு திருட்டு வழக்கில் கைதாகி துமகூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்களுக்கு, சிறையில் வைத்து பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சிறையில் இருந்து வெளியே வந்த பிறகும் அவர்கள் தொடர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். உப்பள்ளியில் மட்டும் அவர்கள் மீது 8 திருட்டு வழக்குகள் உள்ளது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.இதையடுத்து அவர்கள் கொடுத்த தகவலின்பேரில், 300 கிராம் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி, 2 லாரிகள், ஒரு கார் ஆகியவை உள்பட ரூ.53 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டது. கைதான 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்