இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்: ஒரு மாத காதல் தற்கொலையில் முடிந்த சோகம்

இன்ஸ்டாகிராம் மூலம் உருவான ஒரு மாத காதல் தற்கொலையில் முடிந்தது என ரெயில்முன் பாய்ந்த ஜோடி பற்றி பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2024-05-16 22:37 GMT

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கொல்லம் அருகே கிளிக்கொல்லூர் பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் ெரயில் முன் பாய்ந்த நிலையில் உடல் சிதறி கிடந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கிளிக்கொல்லூர் போலீசார் விரைந்து சென்று அவர்களது உடல்களை கைப்பற்றினர்.

பின்னர் அந்த பகுதியில் விசாரித்த போது, ரெயில் வந்த நேரத்தில் இருவரும் தற்கொலை செய்யும் நோக்கில் கட்டி பிடித்தபடி தண்டவாளத்தில் நின்றதாகவும், ரெயில் கண்ணிமைக்கும் நேரத்தில் இருவர் மீதும் மோதியதில் உடல் சிதறி பலியானார்கள் என சோகத்துடன் தெரிவித்தனர். இதனால் அவர்கள் காதல் ஜோடியாக இருக்கலாம் என போலீசார் நினைத்தனர். அதே சமயத்தில் பலியான ஜோடி யாரென்று உடனடியாக தெரியவில்லை.

தற்போது ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்த ஜோடியின் அடையாளம் தெரிந்ததோடு, தற்கொலைக்கான காரணம் பற்றியும் பரபரப்பு தகவல் வெளியானது. அதாவது வாலிபர் கொல்லம் சந்தனத்தோப்பு பகுதியைச் சேர்ந்த சசிதரன் பிள்ளை மகன் அனந்து (வயது 18) என்றும், இளம்பெண் கொச்சி களமசேரி பகுதியைச் சேர்ந்த மது மகள் மீனாட்சி (18) என்பதும் தெரிய வந்துள்ளது.

அனந்து கொல்லத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். மீனாட்சி பிளஸ்-2 படித்து முடித்திருந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் 2 பேருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதல் உருவாகியுள்ளது. சம்பவத்தன்று சினிமா பார்க்க செல்வதாக கூறி விட்டு அனந்து வீட்டில் இருந்து சென்று உள்ளார்.

அதே சமயத்தில் பள்ளியில் மதிப்பெண் சான்றிதழ் வாங்க செல்வதாக கூறி மீனாட்சி வெளியே புறப்பட்டுள்ளார். இந்தநிலையில் தான் இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட காதலை வீட்டில் உள்ளவர்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள் என நினைத்து இருவரும் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து கிளிக்கொல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்