கட்டுமான அதிபர் வீட்டில் நடந்த இரட்டை கொலை வழக்கில் முன்னாள் கார் டிரைவர் உள்பட 3 பேர் கைது

பெங்களூருவில், கட்டுமான அதிபர் வீட்டில் நடந்த இரட்டை கொலை வழக்கில் முன்னாள் கார் டிரைவர், அவரது கூட்டாளிகள் 2 பேர் என மொத்தம் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2022-12-20 20:58 GMT

பெங்களூரு:

இரட்டை கொலை

பெங்களூரு கோரமங்களா 6-வது பிளாக்கை சேர்ந்தவர் ராஜகோபால் ரெட்டி. இவர் கட்டுமான அதிபர் ஆவார். இவரது வீட்டில் அசாம் மாநிலத்தை சேர்ந்த தில் பகதூர் என்பவர் காவலாளியாகவும், கரியப்பா என்பவர் வீட்டு வேலையும் செய்து வந்தார். இந்த நிலையில் ராஜகோபால் ரெட்டி குடும்பத்தினருடன் வெளியூருக்கு புறப்பட்டு சென்று இருந்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் ராஜகோபால் ரெட்டியின் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் தில் பகதூர், கரியப்பா ஆகியோரை கொலை செய்து விட்டு வீட்டில் இருந்து ரூ.5 லட்சம் ரொக்கம், 100 கிராம் தங்கநகைகளை கொள்ளையடித்து சென்று இருந்தனர். இந்த இரட்டை கொலை சம்பவம் குறித்து கோரமங்களா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

கார் டிரைவர் பற்றி தகவல்

மேலும் கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் கொலை நடந்த வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவின் டி.வி.ஆர்.களை கொலையாளிகள் எடுத்து சென்றது தெரியவந்தது.

கொலை நடந்த வீட்டில் கதவுகள் உடைக்கப்படாத காரணத்தால் ராஜகோபால் ரெட்டிக்கு நன்கு தெரிந்தவர்களே இந்த இரட்டை கொலையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனால் ராஜகோபால் ரெட்டிக்கு தெரிந்தவர்கள் மற்றும் அவரிடம் இதற்கு முன்பு வேலை செய்தவர்கள் பற்றிய தகவல்களை போலீசார் சேகரித்தனர். அப்போது ராஜகோபால் ரெட்டியிடம், துமகூரு மாவட்டம் குனிகல்லை சேர்ந்த ஜெகதீஷ் என்பவர் கார் டிரைவராக பணியாற்றி வந்ததும், அவர் ராஜகோபால் ரெட்டியின் வீட்டில் தங்கி இருந்ததும் தெரியவந்தது.

3 பேர் கைது

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜகோபால் ரெட்டிக்கு தெரியாமல் அவரது காரை ஜெகதீஷ் வெளியே எடுத்து சென்றார். அப்போது அந்த கார் விபத்தில் சிக்கியது. இதனால் ஜெகதீசை, ராஜகோபால் ரெட்டி வேலையில் இருந்து நீக்கினார். இதனால் சந்தேகத்தின்பேரில் ஜெகதீசை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அப்போது மண்டியா மாவட்டம் நாகமங்களாவை சேர்ந்த அபிஷேக், அவரது சகோதரர் கிரண் ஆகியோருடன் சேர்ந்து தில் பகதூர், கரியப்பாவை கொலை செய்துவிட்டு ராஜகோபால் ரெட்டியின் வீட்டில் இருந்த ரூ.5 லட்சம் ரொக்கம், 100 கிராம் தங்கநகைகளை கொள்ளையடித்து சென்றதை ஜெகதீஷ் ஒப்புக்கொண்டார். அவர் கொடுத்த தகவலின்பேரில் அபிஷேக், கிரணும் கைது செய்யப்பட்டனர். கைதான 3 பேரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

பணம், நகைகள் பறிமுதல்

அதாவது ராஜகோபால் ரெட்டி வேலையை விட்டு நிறுத்திய பின்னரும் ஜெகதீஷ், கரியப்பாவிடம் தொடர்பில் இருந்து வந்து உள்ளார். ராஜகோபால் ரெட்டி வீட்டில் டிரைவராக வேலை செய்த போது ஜெகதீஷ் அங்கேயே தங்கி இருந்ததால் ராஜகோபால் ரெட்டி பணம், நகைகளை எங்கே வைப்பார் என்பது பற்றி அவருக்கு தெரிந்து இருந்தது. இந்த நிலையில் ராஜகோபால் ரெட்டி தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றது பற்றி அறிந்ததும் அவரது வீட்டில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடிக்க ஜெகதீஷ் முடிவு செய்தார்.

இதுபற்றி அவர் தனது நண்பர்களான அபிஷேக், கிரணிடம் கூறி இருந்தார். பின்னர் 3 பேரும் பெங்களூருவுக்கு வந்து ராஜகோபால் ரெட்டியின் வீட்டிற்கு சென்று தில்பகதூர், கரியப்பாவை கொலை செய்து விட்டு பணம், நகைகளை கொள்ளையடித்துவிட்டு சென்றதும் தெரியவந்தது. கைதான 3 பேரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.5 லட்சம் ரொக்கம், 100 கிராம் தங்கநகைகள், வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்