உத்தரபிரதேசத்தில் லாரி மோதி தீர்த்த யாத்திரை பக்தர்கள் 6 பேர் பலி
உத்தரபிரதேசத்தில் லாரி மோதி தீர்த்த யாத்திரை பக்தர்கள் 6 பேர் உயிரிழந்தனர்.;
ஆக்ரா,
மத்தியபிரதேசத்தின் குவாலியரை சேர்ந்த பக்தர்கள் சிலர் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாருக்கு தீர்த்த யாத்திரை சென்றனர். அங்கு சிவபெருமானை வழிபட்டுவிட்டு, கங்கை தீர்த்தத்தை சேகரித்துக்கொண்டு சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் பதார் என்று கிராமத்தின் அருகில் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் அவர்கள் நடந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கனிம லாரி அவர்கள் மீது மோதியது.
அதில் பலத்த காயமடைந்த பக்தர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் ஒருவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். பலத்த காயமடைந்த மேலும் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.