சிக்கிம் வெள்ளத்தில் மாயமான 77 பேரும் இறந்ததாக அறிவிப்பு

சிக்கிம் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 77 பேரை மீட்பு படையினர் தொடர்ந்து தேடி வந்தனர். ஆனால் சுமார் 2 மாதங்கள் ஆகியும் அவர்களை பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

Update: 2023-12-02 18:45 GMT

சிக்கிம் மாநிலத்தின் வடக்கு பகுதியில் கடந்த அக்டோபர் 4-ந்தேதி திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு பெருமழை கொட்டியது. இதில் தீஸ்தா நதியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி ஏராளமானோர் அடித்துச்செல்லப்பட்டனர். இதில் 46 பேர் பலியாகினர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. ஆனால் இந்த வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட மேலும் 77 பேரை மீட்பு படையினர் தொடர்ந்து தேடி வந்தனர். ஆனால் சுமார் 2 மாதங்கள் ஆகியும் அவர்களை பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை. எனவே அந்த 77 பேரும் இறந்ததாக கருதப்படுவார்கள் என மாநில தலைமை செயலாளர் பதக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:-

மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் 77 பேர் மாயமாகி உள்ளனர். இதில் 2 உடல்கள் பின்னர் கண்டெடுக்கப்பட்டன. ஆனால் அவற்றை அடையாளம் காண முடியவில்லை. இறந்தவர்களின் குடும்பத்துக்கு மாநில அரசு ரூ.4 லட்சம், பிரதமரின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் என இழப்பீடு வழங்கப்படும். இதற்காக உத்தரகாண்ட், இமாசல பிரதேச பேரிடர்களில் மாயமானவர்களுக்கு பின்பற்றப்பட்ட நடைமுறைகளை நாங்களும் பின்பற்ற உள்ளோம். மாயமானவர்களுக்கான இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டவுடன், அவர்களுக்கான இழப்பீட்டை குடும்பத்தினர் பெற முடியும்.

இதற்காக அவர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் மாயமானது குறித்து புகார் செய்ய வேண்டும். அது குறித்து செய்தித்தாள்கள், சமூக ஊடகங்கள் உள்ளிட்டவற்றில் தகவல் வெளியிட்டு விசாரிக்கப்படும். அதேநேரம் சிக்கிமுக்கு வெளியே ஒருவர் மாயமாகி இருந்தால், அந்த மாநில போலீசில் புகார் செய்து, அதை சிக்கிமுக்கு மாற்றி விசாரிக்கப்படும். இந்த நடைமுறைகள் அனைத்தும் ஜனவரிக்குள் முடியும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்