ஓடும் ரெயிலில் பயணியிடம் ரூ. 6¾ லட்சம் நகை திருடியவர் கைது

உடுப்பியில் ஓடும் ரெயிலில் பயணியிடம்ரூ. 6¾ லட்சம் நகை திருடியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-10-06 18:45 GMT

உடுப்பி-

உடுப்பி ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் இருந்து நகை, பணம் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக வெளிமாநிலங்களில் இருந்து வரும் மர்மநபர்கள் ஓடும் ரெயிலில் பயணிகளிடம் நகை, பணத்தை திருடிவிட்டு மற்றொரு ரெயிலில் தப்பி சென்று வருகிறார்கள். இதனை தடுக்க ரெயில்வே போலீசார் ரோந்து பணியிலும், கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் திருட்டு சம்பவங்கள் குறையவில்லை.

இந்தநிலையில், நேற்றுமுன்தினம் நேத்ராவதி விரைவு ரெயில் உடுப்பி ரெயில் நிலையத்திற்கு வந்தது. இந்த ரெயிலில் கல்யாணி பாலகிருஷ்ணா என்பவர் பயணம் செய்தார். இந்தநிலையில், அவர் கழிவறைக்கு சென்றார். பின்னர் தனது இருக்கைக்கு கல்யாணி பாலகிருஷ்ணா வந்தார். அப்போது அவர் வைத்திருந்த கைப்பையை காணவில்லை.

அதில் ரூ. 6 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான தங்க நகைகள், ரூ. 3 ஆயிரத்து 370 ரொக்கம் மற்றும் ஏ.டி.எம். கார்டு இருந்துள்ளது. அதனை மர்மநபர்கள் திருடிசென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர் உடுப்பி ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில், உடுப்பி ரெயில் நிலையத்தில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒருவர் சுற்றித்திரிந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் டெல்லியை சேர்ந்த சன்னி மல்ஹோத்ரா (வயது30) என்பதும், ஓடும் ரெயிலில் பயணிகளிடம் இருந்து நகை, பணம், கைப்பைகளை திருடி வந்ததும் தெரியவந்தது. மேலும் அவர் கல்யாணி பாலகிருஷ்ணாவின் கைப்பையை திருடியதை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து சன்னியிடம் இருந்து ரூ. 6 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான நகைகள், ரூ. 3 ஆயிரத்து 700 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை மணிப்பால் போலீசில் உடுப்பி ரெயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து மணிப்பால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்