ஏர் இந்தியா விமானம் புறப்படுவதில் காலதாமதம்; பணியாளர்கள், பயணிகள் இடையே கடும் வாக்குவாதம்

டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் புறப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டதில் பயணிகள் மற்றும் பணியாளர்கள் இடையே கடும் வாக்குவாதம் காணப்பட்டது.

Update: 2023-02-22 05:25 GMT



புதுடெல்லி,


டெல்லி விமான நிலையத்தில் 3-வது முனையத்தில் இருந்து மும்பைக்கு புறப்பட்டு செல்வதற்காக ஏ.ஐ.-805 என்ற எண் கொண்ட ஏர் இந்தியா விமானம் நேற்றிரவு தயாரானது.

இரவு 8 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் பின்னர் இரவு 10.40 மணிக்கு புறப்படும் என காலஅட்டவணை திருத்தப்பட்டது. எனினும், இந்த காலதாமதம் தொடர்ந்து நீடித்து கொண்டே சென்றது.

இதன்படி, இரவு 11.35 மற்றும் நள்ளிரவு 12.30 மணி என சென்று, இறுதியில் இன்று அதிகாலை 1.48 மணிக்கு புறப்பட்டு சென்று உள்ளது. இதனால், விமானம் புறப்படுவதற்காக காத்திருந்த பயணிகள் எரிச்சலடைந்தனர்.

இதன் எதிரொலியாக, விமான நிர்வாக ஊழியர்களிடம் பயணிகள் பலர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுபற்றிய வீடியோவும் வெளியானது.

ஏறக்குறைய 5 மணிநேரத்திற்கும் கூடுதலாக விமானம் புறப்பட காலதாமதம் ஏற்பட்டது, பயணிகளிடையே ஆத்திரம் ஏற்படுத்தியது. இதுபற்றி ஒரு பயணி கூறும்போது, விமானி வந்து கொண்டிருக்கிறார். அவர் வருவதில் தாமதம் ஏற்பட்டு விட்டது என புதுசு புதுசாக விமான கண்காணிப்பாளர்கள் கூறி, வாடிக்கையாளர்களை முட்டாளாக்குகின்றனர் என கொந்தளிப்புடன் கூறினார்.

எனினும், மற்றொரு விமான நிறுவன பணியாளர் கூறும்போது, கடைசி நேரத்தில் விமானம் இயக்க வரவேண்டிய பயணிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு விட்டது. அந்த விமானியால் விமானம் புறப்பட தாமதம் ஏற்பட்டு விட்டது என கூறினார்.

இந்த காலதாமதத்தினால், கத்தார் நாட்டுக்கு செல்ல வேண்டிய இணைப்பு விமானம் ஒன்றை எங்களால் பிடிக்க முடியாமல் போய் விட்டது என பலர் கூறினர்.

இது மிக மோசம் வாய்ந்த அனுபவம். விமான நிலையத்தில் 200 பயணிகள் இருந்தனர். விமான நிறுவனத்திடம் இருந்து தெளிவான எந்தவித பதிலும் இல்லை. இரவு 11.50 மணிவரை தண்ணீர் கூட வழங்கவில்லை என மற்றொரு பயணி கூறினார்.

எனினும், ஏர் இந்தியா விமான நிறுவன செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, தொழில்நுட்ப காரணங்களால் விமானம் புறப்பட 4 மணிநேரம் காலதாமதம் ஏற்பட்டு உள்ளது. அனைத்து பயணிகளுக்கும் உணவு வழங்கப்பட்டு, நன்றாக கவனிக்கப்பட்டது என கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்